செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே கள்ளச் சந்தையில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விற்பனைக்கு வைத்திருந்த 800 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தாலுகா, பொன்விளைந்த களத்தூர் கிராமத்தில் கள்ளச் சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாக கடந்த 2 நாட்களுக்கு முன் செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் புகழ், எஸ்ஐ சதாசிவம் தலைமையில் பெண் காவலர் உள்பட கலால் பிரிவு போலீசார் விரைந்து சென்றனர். சம்பவ இடத்தில் போலீசார் மாறுவேடத்தில் விசாரித்தபோது, அங்கு குணசுந்தரி என்ற பெண்ணும், சுலோசனா என்ற மூதாட்டியும் கள்ளச் சந்தையில் மது விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கள்ளச் சந்தையில் மது விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டி சுலோசனாவை செங்கல்பட்டு கலால் போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து 720 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, நேற்றிரவு அதே பகுதியில் பவுண்டு தெருவில் வசிக்கும் சுரேஷ் என்பவரின் மனைவி குணசுந்தரி (41) என்பவரின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில், அங்கு கள்ளச் சந்தையில் விற்பனை செய்ய வைத்திருந்த 80 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து செங்கல்பட்டு கலால் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறி கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபட்ட சுலோசனா, குணசுந்தரி ஆகிய 2 பெண்களையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 800 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post செங்கல்பட்டு அருகே கள்ளச்சந்தையில் மது விற்ற 2 பெண்கள் கைது: 800 மதுபாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.