*வட மாநில வாலிபர்கள் 2 பேர் கைது
ஜோலார்பேட்டை : ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்து 2 வாலிபர்களை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.ஜார்கண்ட் மாநிலம் அட்டியாவில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வரை செல்லும் அட்டியா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காட்பாடியை கடந்து வந்து கொண்டிருந்தது. ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் ரயில் பெட்டிகளில் சோதனை செய்தனர். அப்போது ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்ததும் ரயிலில் தீவிர சோதனையில் ஈடுபடும் ரயில்வே போலீசாரை கண்டு 2 வாலிபர்களும் ரயிலில் இருந்து இறங்கி வெளியே வந்துள்ளனர்.
இதற்கிடையே திருப்பத்தூர் எஸ்பி ஆல்பர்ட் ஜானுக்கு ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு செல்ல கஞ்சா கடத்தப்பட்டு வருவதாகவும் ரயில்வே போலீசாரின் சோதனையின்போது ரயிலிலிருந்து இறங்கி ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் இருந்து கஞ்சாவை எடுத்துக்கொண்டு பெங்களூர் நோக்கி பேருந்தில் செல்வதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் திருப்பத்தூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் செல்லும் கிருஷ்ணகிரி சாலையில் உள்ள சின்ன கந்திலி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் மூலம் வாகன தணிக்கை செய்தனர். அப்போது பேருந்து ஒன்றில் சோதனை செய்தபோது சந்தேகத்தின் பேரில் இருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது உடமைகளை சோதனை செய்தபோது அவர்கள் வைத்திருந்த இரண்டு பைகளில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து அவர்கள் வைத்திருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிர்தோஷ் ஆலம்(22), அஸ்லாம் அன்சாரி(22) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் 2 வாலிபர்கள் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்து இருவரையும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.
The post மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடவடிக்கை ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.