×

மூளைச்சாவு அடைந்த ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம்

உடன்குடி, நவ. 22: திருச்செந்தூர் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுகிறது. திருச்செந்தூர் அருகே உள்ள கீழநாலுமூலைக்கிணறு பகுதியை சேர்ந்த தங்கபெருமாள் மகன் சதீஷ்(33). இவர், பணிக்கநாடார்குடியிருப்பில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். சதீசுக்கு திருமணமாகி 6 மாத ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் வழக்கம்போல் தனது டூவிலரில் பள்ளிக்கு சென்ற இவர், பணிகளை முடித்து விட்டு பரமன்குறிச்சி வழியாக வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். கீழநாலுமூலைக்கிணறு பகுதியில் வரும்போது மாடு குறுக்கே வரவே, நிலை தடுமாறிய ஆசிரியர் சதீஷ் சாலையில் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்ததால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மூளை செயலிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது குடும்பத்தினர், சதீசின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்தனர். தொடர்ந்து அதற்குரிய பணிகள் நடந்து வருகிறது. இந்த விபத்து குறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மூளைச்சாவு அடைந்த ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம் appeared first on Dinakaran.

Tags : Udengudi ,Tiruchendur ,
× RELATED மக்களவை தேர்தலில் அண்ணாமலை தோல்வி...