![]()
ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் 70 தொகுதிகளில் இன்று 2ம் கட்ட தேர்தலும், மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இன்றுடன் 3 மாநிலங்களில் தேர்தல் முடிவுற்றது. சட்டீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த 7ம் தேதி, நக்சல் தீவிரவாத பாதிப்பு உள்ள 20 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் 78 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பலத்த பாதுகாப்புடன் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
இன்று தேர்தல் நடக்கும் 70 தொகுதிகளில் பிலாஸ்பூர் மண்டலத்தில் மட்டும் 25 தொகுதிகள் உள்ளன. இங்கிருந்து சுமார் 3ல் ஒரு பங்கு எம்எல்ஏக்கள் தேர்வுசெய்யப்படுவதால், பிலாஸ்பூர் மண்டலம் பாஜக, காங்கிரசுக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. சட்டீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் இந்த தேர்தலில் 75 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் களத்தில் உள்ளது. கடந்த 2003 முதல் 2018 வரை சட்டீஸ்கரில் ஆட்சியில் இருந்த பாஜக, ஆட்சியை மீண்டும் கைப்பற்ற தீவிர முயற்சி எடுத்துள்ளது. சட்டீஸ்கரில் 22 மாவட்டங்களில் உள்ள 70 தொகுதிகளில் இன்று நடக்கும் 2ம் கட்ட தேர்தலில் 958 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 2,533 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் பாஜக – காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இங்கு மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக அரசு தீவிர முயற்சி எடுத்துள்ளது. இரு மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘மத்தியப் பிரதேசத்தில் இன்று அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள் அனைவரும் உற்சாகமாக வாக்களித்து இந்த ஜனநாயகத் திருவிழாவின் அழகைக் கூட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
சட்டீஸ்கரில் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்கள் தங்கள் கடமையை ஆற்ற அழைக்கிறேன். ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்துக்கு முக்கியமானது’ என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும், வாக்காளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே மிசோரமில் ஒரே கட்டமாக கடந்த 7ம் தேதி வாக்குப்பதிவு முடிவுற்றது. ம.பி, சட்டீஸ்கரில் இன்றுடன் வாக்குப்பதிவு முடிவடைந்ததையடுத்து 3 மாநிலங்களில் தேர்தல் நிறைவடைந்தது. வரும் 23ம் தேதி ராஜஸ்தானிலும், 30ம் தேதி தெலங்கானாவிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த இரு மாநில தேர்தல்கள் முடிவுற்றதும் வருகிற டிசம்பர் 3ம் தேதி 5 மாநிலத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும். அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதால், எந்தெந்த மாநிலத்தில் எந்தெந்த கட்சிகள் ஆட்சி அமைக்கும் என்பது தெரிந்துவிடும்.
பேரவை தேர்தல் துளிகள்
* மத்திய பிரதேச மாநிலம் புத்னி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வாக்களிக்கும் வாக்குச்சாவடி மையத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. அதனால் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரம் சரிசெய்யப்பட்ட பின்னர், வாக்காளர்கள் வாக்களித்தனர்.
* ஒன்றிய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் படேல், ஃபக்கன் சிங் குலாஸ்தே உட்பட 7 எம்பிக்களை பாஜக களம் இறக்கியுள்ளதால், அவர்களும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் கமல்நாத் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர்.
* சட்டீஸ்கரில் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல், துணை முதல்வர் டிஎஸ் சிங் தியோ, எட்டு அமைச்சர்கள், நான்கு எம்பிக்கள் களத்தில் உள்ளதால், அவர்களும் வாக்களித்தனர்.
The post பாஜக – காங்கிரஸ் இடையே நேரடி போட்டி: சட்டீஸ்கர், ம.பி-யில் விறுவிறு வாக்குப்பதிவு; இன்றுடன் 3 மாநிலங்களில் தேர்தல் முடிந்தது appeared first on Dinakaran.
