ஹாங்சோ: ஆசிய விளையாட்டுப் போட்டியில் 13வது நாளான நேற்றுக் காலை மகளிர் குழு வில்வித்தைப் போட்டிகள் நடந்தன. அதில் இந்திய வீராங்கனைகள் ஜோதி சுரேகா வேன்னம், அதிதி கோபிசந்த் சுவாமி, பர்னீத் கவுர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். முதலில் நடந்த காலிறுதியில் இந்திய அணி 231-220 என்ற புள்ளிக் கணக்கில் ஹாங்காங்கையும், அரையிறுதியில் இந்தோனேசிய அணியை 233-219 என்ற புள்ளிக் கணக்கிலும் வென்றனர். அடுத்த சில மணி நேரங்களில் நடந்த தங்கப் பதக்கத்துக்கான இறுதி ஆட்டத்தில் சீன தைபே வீராங்கனைகள் சென், வூவாங், வாங் ஆகியோர் கடும் சவாலைத் தந்தாலும் இந்திய வீராங்கனைகள் அதை சமாளித்து 230-229 என்ற புள்ளிக் கணக்கில் வென்றனர்.
இந்திய வீராங்கனைகள் ஜோதி, அதிதி, பிரனீத் ஆகியோர் 13வது நாளான நேற்று முதல் தங்கம் வென்றனர். சீன தைபே அணி வெள்ளியையும், கொரியா வெண்கலத்தையும் கைப்பற்றின. அதேபோல் ஆடவர் குழு வில்வித்தை போட்டியில் இந்திய வீரர்கள் ஒஜாஸ் பிரவீன், அபிஷேக் வர்மா, பிரதமேஷ் சமாதன் ஆகியோரைக் கொண் அணி விளையாடியது. அவர்கள் நேற்று காலிறுதியில் பூடான் அணியை 235-221 என்ற புள்ளி கணக்கிலும், அரையிறுதியில் சீன தைபே அணியை 235-224 என்ற புள்ளி கணக்கிலும் வீழத்தினர்.
தொடர்ந்து நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 235-230 என்ற புள்ளிக் கணக்கில் கொரியாவை வீழ்த்தி நேற்று வில்வித்தையில் 2வது தங்கத்தை முத்தமிட்டது. இதில் கொரியா வெள்ளி, மலேசியா வெண்கலம் வென்றன. இவர்களில் ஜோதி, ஒஜாஸ் இருவரும் ஏற்கனவே கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றனர். கூடவே நாளை நடைபெறும் தங்கத்துக்கான மகளிர் பைனலில் ஜோதி, ஆடவர் பைனலில் ஒஜாஸ் ஆகியோர் களம் காணுகின்றனர். அதிலும் ஆடவர் பைனலில் ஒஜாஸ், சகவீரர் அபிஷேக்கை எதிர்ப்பதால் தங்கம், வெள்ளி உறுதி. மேலும் அதிதி வெண்கலத்துக்கான ஆட்டத்தில் விளையாட உள்ளார். நாளை வில்வித்தையில் தங்கம் உட்பட 4 பதக்கங்கள் கிடைக்கும்.
*ஸ்குவாஷில் தங்கம், வெள்ளி
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டம் நேற்று நடந்தது. அதில் இந்தியாவின் ஹரிந்தர் சிங் பால், தீபிகா பலிக்கல் கார்த்திக் இணை, மலேசியாவின் அய்ஃபா அஸ்மான், முகமது சியாஃபிக் இணையுடன் மோதியது.ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய இணை 34நிமிடங்களில் 11-10, 11-10 என நேர் செட்களில் வென்று தங்கத்தை வசப்படுத்தியது. மலேசிய இணை வெள்ளியை கைப்பற்றியது.
தொடர்ந்து நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோஷல், மலேசியாவின் என்சி ஈன் யோவ் ஆகியோர் மோதினர். அதில் யோவ் ஒரு மணி 12 நிமிடங்கள் போராடி 9-11, 22-9, 11-5, 11-7 என்ற செட்களில் வெற்றிப் பெற்று தங்கத்தை கைப்பற்றினார். சவுரவ் வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினர். முன்னதாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஸ்குவாஷ் போட்டியில் மலேசியாவின் சிவசங்கரி சுப்ரமணியன் 3-2 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் சின் யூக் சான்யை வீழ்த்தி தங்கம் வென்றார்.
*ஹாக்கியில் இந்திய மகளிர் தோல்வி
இந்திய மகளிர் அணி நேற்று நடந்த முதல் அரையிறுதியில் சீன அணியை எதிர்கொண்டனர். லீக் சுற்றில் ஒரு ஆட்டத்தில் கூட தோற்காத இந்திய மகளிர் அணி நேற்று ஒரு கோல் கூட அடிக்க முடியாமல், தன்னை விட தரவரிசையில் பின்தங்கிய சீனாவிடம் திணறியது. முடிவில் சீனா 4-0 என்ற கோல் கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதி டிரா ஆக பெனால்டி ஷூட் முறையில் கொரியா 4-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வென்றது. நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் சீனா-கொரியா அணிகளும், வெண்கலத்துக்கான ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான் அணிகளும் மோத உள்ளன.
* செஸ் வீரர்கள் பிரக்ஞானந்தா, தொம்மராஜு குகேஷ், விதித் குஜராத்தி, அர்ஜுன் எரிகேசி ஆகியோரை கொண்ட இந்திய அணி நேற்று 6வது சுற்றில் வியாட்நாம் அணியை 2.5-1.5என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. மற்ற 3 பேரும் டிரா செய்ய, எரிகேசி மட்டும் வெற்றிப் பெற்றார். அதே நேரத்தில் இந்திய மகளிர் அணி 2.0-2.0 என்ற கணக்கில் கஜகிஸ்தானுடன் டிரா செய்தது.
* சீன ஒபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர்(4வது ரேங்க்) 2-0 என நேர் செட்களில் ரஷ்ய வீரர் டானில் மெத்வதேவை(3வது ரேங்க்) வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். மகளிர் ஒற்றையர் காலிறுதியில் விளையாட கரோலின் கார்சியா(பிரான்ஸ), மரியா சாக்கரி(கிரீஸ்), கோரி காப்(அமெரிக்கா) ஆகியோர் நேற்று தகுதிப் பெற்றனர்.
The post வில்வித்தையில் ஒரே நாளில் 2 தங்கம்: நாளை 4 பதக்கங்கள் உறுதி appeared first on Dinakaran.