
கோவை: ‘‘அரசியலை விட்டு என்னை விடுவித்துவிட்டால் நான் தோட்டத்துக்கு சென்று விடுவேன்’’ என்று அமித்ஷாவை சந்திப்பதற்கு முன் அண்ணாமலை விரக்தியுடன் பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரதப் பிரதமரின் தூய்மை பாரத திட்டத்தின்கீழ் நேற்று பல்வேறு பகுதிகளில் பாஜவினர் ஒரு மணி நேரம் தூய்மை பணியை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கோவை கோவில்பாளையத்தை அடுத்த எஸ்.எஸ்.குளம் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டார். கையில் கடப்பாரையை பிடித்து குழிதோண்டி மரக்கன்றுகளை நடவு செய்த அண்ணாமலை அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோருடன் இணைந்து தூய்மை பணியிலும் ஈடுபட்டார்.
முன்னதாக அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக கூட்டணி முறிவு குறித்து கேட்கிறீர்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதம் இருக்கிறது. அவரவர் கட்சியை வளர்க்க வேண்டும் என்பதே ஒவ்வொருவருடைய நோக்கம். கூட்டணி தொடர்பாக அகில இந்திய தலைவர்கள் பேச வேண்டிய நேரத்தில் பேசுவார்கள். நமக்கு இப்போது கொடுத்திருக்கிற பொறுப்பு கட்சியை வளர்ப்பது. ஒரு கருத்துக்கு எதிர் கருத்து சொல்லி அது எங்கே போய் முடியும் என சொல்ல முடியாது. கருத்து சொல்லிக்கொண்டே இருக்கலாம். நான் சொன்னேன் என்று ஒரு கருத்தை சொல்கிறார்கள். பின்னர் இன்னொருவர் அவர் சொல்லவில்லை என்கிறார். ஒருவர் இதற்காகத்தான் கூட்டணி என்கிறார். மற்றொருவர் இல்லை என்கிறார். எனவே நேரம் வரும்போது பேசுவோம்.
இந்த நேரத்தில் அரசியலில் என்னை விடுவித்துவிட்டால் நான் என் தோட்டத்துக்கு போய்விடுவேன். காலப்போக்கு… காலச்சூழல்… வாழ்வில் நாம் நினைப்பது நடக்காது. அரசியலில் இருக்கவேண்டும் என்று இருக்கிறேன். ஒரு சில மாற்றங்களை கொண்டு வருவதற்கு அரசியலை ஒரு டூலாக பார்க்கிறேன். அரசியலைப் பொறுத்தவரை 70 சதவீதம் நெகட்டிவாகவும், 30 சதவீதம் பாசிட்டிவாகவும் பார்க்கிறேன். இதில் ஆக்ரோஷமான உணர்வுகள், சித்தாந்த அடிப்படையிலான சண்டை, தனிமனித தாக்குதல் தாண்டி நிற்கிறோம். இது கொஞ்சம் நெகட்டிவ் அதிகமாக இருக்கக்கூடிய துறை. இதில் கிடைக்கக்கூடிய மாற்றம் என்பது மற்ற துறைகளை காட்டிலும் அரசியலில் வேகமாக கிடைக்கும்.
அரசியலை பொறுத்தவரை பிடித்த அரசியல்வாதியாக இருக்கிறேன் என்பதைவிட மாற்றத்தை கொண்டு வருவதற்கு அரசியலைத்தவிர வேறு வழி இல்லை என்பதால் அரசியலில் இருக்கிறேன் என்பதே சரியான வார்த்தை. பொறுத்திருப்போம். காலமும் நேரமும் வரும் வரை நமது பணியை செய்து கொண்டே இருப்போம். இவ்வாறு அண்ணாமலை கூறினார். அமித்ஷாவை சந்திக்க டெல்லி செல்வதற்கு முன் அண்ணாமலை, ‘‘அரசியலில் இருந்து என்னை விடுவித்துவிட்டால் நான் தோட்டத்திற்கு செல்வேன்’’ என்று கூறியிருப்பதன்மூலம் பாஜ மாநில தலைவர் மாற்றப்படுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
* பிரபல ரவுடி சேர்ந்ததே தெரியாதாம்…
‘பாஜவில் ெநடுங்குன்றம் சூர்யா (பிரபல ரவுடி) இணைந்தது பற்றி கேட்கிறீர்கள். அதுபற்றி எனக்கு தெரியாது. நான் பாதயாத்திரையில் போய்கொண்டு இருக்கிறேன். என் முன்னால் இணையவில்லை. நான் யாரையும் இணைக்க சொல்வதில்லை. சிலர் பாலிடிக்ஸை ஒரு பவர் கேமாக பயன்படுத்துகிறார்கள். அரசியல் மூலமாக சிலர் ஆதாயங்களை தேடி, தான் ஒரு பவர்புல் ெபர்சன் என காட்ட வேண்டும் என்று நிறைய பேர் வருகிறார்கள்.
நான் இல்லையென்று சொல்லவில்லை. சில பேர் தவறான மனிதர்களாக இருந்தாலும் தன்னை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பாக பார்க்கிறார்கள். அதற்கு பாஜ ஒரு வாய்ப்பை கொடுத்திருப்பதாக பார்க்கிறேன். நல்லவர்கள் என்று கட்சியில் சேருபவர்கள் தொடர்ந்து நல்லவர்களாக இருக்க போவது கிடையாது. ஒரு மாத காலம் இரு மாத காலம் டிரையல் பாருங்கள். பாஜ அடையாளத்தை வைத்து யாராவது தப்பு செய்தால் நான் விடமாட்டேன்’ என்று அண்ணாமலை கூறினார்.
*‘மாநில தலைவர் பதவி வெங்காயம் மாதிரி… உரித்தால் வேஸ்ட்’
அதிமுக-பாஜ கூட்டணி முறிவு குறித்து அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து விளக்கமளிப்பதற்காக கோவையில் இருந்து நேற்று மாலை 3.20 மணிக்கு விமானம் மூலம் அண்ணாமலை டெல்லிக்கு சென்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் கூட்டணி குறித்து என்னிடம் எந்த அறிக்கையையும் கேட்கவில்லை. நானும் கொடுக்கவில்லை. அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமையும்போது, தே.ஜ. கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படுமா? என கேட்கிறீர்கள், பின்னடைவு எதுவும் கிடையாது. 2024ல் நான் ஒரு நம்பரை சொல்லி இருக்கிறேன். அது வருதா இல்லையா என பாருங்கள். சில இடத்தில் குறி வைத்தால் அது தப்பாது.
பாஜ மாநில தலைவர் இடத்திற்கு போட்டி நடக்கிறதா? என்று கேட்கிறீர்கள். தயவு செய்து எடுத்து கொள்ளட்டும். மாநில தலைவர் பதவி வெங்காயம் போன்றது என நான் ஏற்கனவே கூறியிருப்பேன். வெங்காயத்தை உரித்து பார்த்தால் எதுவுமே இருக்காது. அரசியலில் பதவிக்காக வந்தவன் நான் கிடையாது. இதைவிட அதிகமான பவரை பார்த்தவன் நான். எனக்கு என ஒரு குட்டி உலகம் உள்ளது. அதில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் மோடிக்காக அரசியலுக்கு வந்துள்ளேன். என்னை பொறுத்தவரை ஒரு கருத்தை கூறினால் அதில் உறுதியாக இருப்பேன். என்னை யாருக்காகவும் மாற்றி கொள்ள மாட்டேன். எனக்காக வேண்டுமென்றால் சிலர் மாறலாம்.
அட்ஜெஸ்மென்ட் பாலிடிக்ஸ் அண்ணாமலையிடம் கிடையாது. அண்ணாமலையை முதல்வராக்க வேண்டும் என சொன்னதாக முன்னாள் அமைச்சர் கே.சி கருப்பணன் சொன்ன கருத்துக்கு இன்னொரு முன்னாள் அமைச்சர் பதில் சொல்லி இருக்கிறார். அதிமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் அவர்களுக்கு உள்ளேயே மாறி மாறி பேசுக்கொள்கிறார்கள். இதில் விவசாயியான நான் என்ன சொல்ல வேண்டி உள்ளது. அதிமுக ஊழல் பட்டியல் வெளியிடுவது குறித்து கேட்கிறீர்கள். பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
* தினமும் 25 ஆயிரம் பேருடன் சந்திப்பு அடுத்த உருட்டு!
அண்ணாமலை கூறுகையில், ‘அரசியலை பொறுத்தவரை சில விஷயங்கள் வர பிரசாதமாக அமையும். 2024 தேர்தலில் நான் உறுதியாக இருக்கிறேன். தற்போது 25 ஆயிரம் பேரை தினமும் சந்திக்கிறேன். தமிழ்நாட்டில் எந்த அரசியல்வாதியும் இவ்வளவு மக்களை தற்போது பார்ப்பது கிடையாது’ என்றார். அண்ணாமலை தினமும் நடைபயணம் என்ற பெயரில் 2 அல்லது 3 கிலோ மீட்டர் தான் செல்கிறார். அதிலும் கூட சொன்ன நேரத்தில் நடைபயணத்தை தொடங்குவதில்லை.
பல மணி நேரம் கட்சியினரை காக்க வைத்துவிட்டு பெயருக்கு நடக்கிறார். அவ்வப்போது கொஞ்சம் நாள் ரெஸ்ட் வேற. நடைபயணத்தின்போது வாய்க்கு வந்ததை அடிச்சிவிடும் அண்ணாமலை தினமும் ஒரு பொய்யை சொல்லி கொண்டு வருகிறார். அதற்கான ஆதாரம் வெளியானதும் வாயை திறப்பதில்லை. சமீபத்தில் பொள்ளாச்சியில் நடைபயணத்தின்போது வலது கை விரலில் சிறியதாக ஏற்பட்ட காயத்துக்கு இடது கை விரலில் பேண்டேஜ் போட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இவ்வாறு தினமும் ஒரு பொய், காமெடி செய்து வரும் அண்ணாமலை, தினமும் 25 ஆயிரம் பேரை சந்திப்பதாக அடுத்த உருட்டை சொல்லி இருக்கிறார்.
* பெண் நிருபரிடம்
அண்ணாமலை ஆவேசம்
‘‘மாநில தலைவர் பதவி இல்லை என்றால் தொடர்ந்து கட்சியில் செயல்படுவீர்களா?’’ என பெண் நிருபர் ஒருவர் அண்ணாமலையிடம் கேட்டார். அந்த கேள்விக்கு ஆவேசமடைந்த அண்ணாமலை, நிருபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ‘‘சிஸ்டர் இங்க வாங்க… இந்த மாதிரி கேள்விகளை கேட்பது யார் என்று மக்களுக்கு தெரியட்டும். கேள்விக்கு ஒரு மரபு உள்ளது. அந்த மரபை தாண்டிவிட்டால் அண்ணாமலை யாராக இருந்தாலும் விடமாட்டேன்.’’ என்றார். இதற்கு மற்ற நிருபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
The post பாஜ மாநில தலைவர் மாற்றமா? அரசியலில் என்னை விடுவித்தால் தோட்டத்துக்கு சென்று விடுவேன்: அமித்ஷாவை சந்திப்பதற்கு முன் அண்ணாமலை ‘விரக்தி’ appeared first on Dinakaran.