×

மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்தால் பொறுத்துக்கொள்ள முடியாது!: புதுச்சேரியில் கோயில் நிலத்தை திரும்ப ஒப்படைக்க பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு ஐகோர்ட் ஆணை

சென்னை: புதுச்சேரியில் கோயில் நிலத்தை திரும்ப ஒப்படைக்க பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் பிரசித்திபெற்ற காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான 64,000 சதுர அடி நிலத்தை போலி பத்திரம் தயாரித்து தனியார் நிறுவனத்திடம் விற்கப்பட்டுள்ளதாக கூறி, இது சம்பந்தமான விற்பனை பத்திரத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் வழக்கு தொடர்ந்திருந்தது. மனுவில், நில அபகரிப்பில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் தற்போதைய பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார், அவருடைய மகன் ரிச்சர்ட் ஜான்குமார் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பு நடைபெற்றது. இந்த வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர், மூடி சீலிட்ட கவரில் அறிக்கையை நீதிபதி முன்பு சமர்ப்பித்தனர். தொடர்ந்து, இரு எம்.எல்.ஏக்கள் தரப்பில், தாங்கள் அப்பாவிகள் என்றும் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும் குறிப்பிட்ட சொத்து கோயிலுக்கு சொந்தமானது என்று நிரூபித்தால் கோயில் நிர்வாகத்திடம் தாங்கள் ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கோயில் நில அபகரிப்பு புகார் நிரூபணம் ஆனால் தொடர்புடைய பாஜக எம்.எல்.ஏ.க்கள் யாரையும் விட்டு வைக்கப் போவதில்லை என புதுவை அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உறுதி அளித்தார். இதையடுத்து, காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன், கோயில் சொத்து தனியாருக்கு விற்கப்படுவதில் அரசு ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பது குறித்து அதிர்ச்சி தெரிவித்தார். குறிப்பாக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதி, புதுச்சேரி அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி விசாரணையை தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும், மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ.க்கள் தவறு செய்தால் பொறுத்துக் கொள்ள முடியாது என தெரிவித்த நீதிபதி, பொது சொத்தான கோயில் சொத்தை பாதுகாக்க வேண்டியது சட்டமன்ற உறுப்பினர்களின் கடமை கூட என்பதினால் உடனடியாக கோயில் நிர்வாகத்திடம் அந்த இடத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்ட் ஜான்குமார் ஆகியோர் சிபிசிஐடி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார். தொடர்ந்து, வழக்கு விசாரணை 6 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்தால் பொறுத்துக்கொள்ள முடியாது!: புதுச்சேரியில் கோயில் நிலத்தை திரும்ப ஒப்படைக்க பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Tags : People's Representatives ,Bajaka ,Puducherry l. PA ,Chennai ,Puducherry ,Chennai High Court ,PE ,Kamadsiyamman Temple ,Representatives ,Puducherry l. ,PA ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...