×

50 கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் அன்னசமுத்திர கண்மாயில் மழைநீரை சேகரிக்க நடவடிக்கை

*பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை

நிலக்கோட்டை : ஐந்திற்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளின் 50 கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் அன்னசமுத்திர கண்மாயில் மழைநீரை சேகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த திண்டுக்கல்-மதுரை தேசிய நான்குவழிச் சாலை மற்றும் சிறுமலைக்கிடையே 18-வார்டுகளைக் கொண்ட அம்மையநாயக்கனூர் பேரூராட்சி உட்பட நரியூத்து, மாலையகவுண்டன்பட்டி, பள்ளப்பட்டி, குல்லலக்குண்டு, சிலுக்குவார்பட்டி என ஐந்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது இந்த கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களின் நிலத்தடி பாசன வசதி பெரும் வகையில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் வெட்டப்பட்ட அன்னசமுத்திர கண்மாயின் பிரதான நீர்வரத்து ஓடைகளான சிறுமலையிலிருந்து வரும் தளிஓடை மற்றும் கருக்காட்சி ஓடைகள் பல்வேறு ஆக்கிரமைப்புகளால் கடந்த 25 ஆண்டுகளாக நீர் வரத்து முற்றிலும் நின்று வறண்டு விட்டது.

நாளடைவில் தேசிய நான்கு வழிச்சாலை மற்றும் தனியார் ஆக்கிரமிப்புகளால் சுருங்கி தற்போது 50 ஏக்கருக்கும் குறைவான ஏக்கர்கள் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த கண்மாயின் தொடர் வறட்சியால், நீர் பிடிப்பு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்கும் கீழ் அதல பாதாளத்துக்கு சென்றதால் விவசாயம் முற்றிலும் குறைந்து கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக பெய்த தொடர்மழை காரணமாக காட்டாறுகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் மற்றும் சிறுமலை அடிவாரத்தில் உள்ள சிறுமலை நீர் தேக்கம் நிரம்பி ஒரு மாதத்திற்கு மேலாக வெளியேறிய மறுகால் உபரி நீரால் கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு கடந்தாண்டு முதல் முறையாக இக்கண்மாய் நிரம்பியது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் விறுவிறுவென உயர்ந்தது.

கிணற்றில் நீர்இறைக்கும் அளவிற்கு சுற்றுவட்டார பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்தது, இதனால் மீண்டும் விவசாயம் துளிர்ந்து விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால் இந்த ஆண்டு போதிய பருவ மழை பெய்யாததாலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு இக்கண்மாயில் நீர் நிறுத்தப்பட்டதாலும் விறுவிறுவன குறைந்த நீரின் அளவு முற்றிலும் குறைந்து வறண்டு கிடக்கிறது.

எனவே மழைகாலத்திற்கு முன்பே மழை நீரை தேக்கிவைக்க கண்மாயினை தூர்வாரி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து அப்பகுதி விவசாயி தர்மநாதன் கூறுகையில், நிலக்கோட்டை தாலுகாவின் கிழக்கு எல்லையாகவுள்ள சிறுமலையை அடுத்தள்ள இப்பகுதி,வானம் பார்த்த பூமியாக பருவ மழையை நம்பி மானாவாரி பயிர்கள் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது.

கண்மாய்க்கு சிறுமலையிலிருந்து வரக்கூடிய இரண்டு பிரதான ஓடைகளை முற்றிலும் தடுத்து மாற்றி அமைக்கப்படுவதாக கூறிவிட்டு மாற்று வழி ஏற்படுத்தாமல் விட்டதால், நீர்வரத்து இன்றி தொடர்ந்து வறண்டுவிட்டது.அதனால் பகுதியில் விவசாயம் பொய்த்து, வேலை வாய்ப்பு இன்றி பல குடும்பங்கள் திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டன., இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து திமுக நகர செயலாளரும்க வுன்சிலருமான விஜயகுமார் இப்பகுதி விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயிகளை ஒருங்கிணைத்து நீர்வழி பாதைகளை சீரமைத்து சிறுமலையாறிலிருந்து வெளியேறிய உபரி நீர் மற்றும் காற்றாற்று வெள்ள மழை நீரை தேக்கி வைத்ததால் 25 ஆண்டுகளுக்கு பின்பு முதல் முறையாக கண்மாய் முழு கொள்ளளவும் நிரம்பி மறுகால் சென்றது.

தற்போது மழை பொய்த்து போனதால் கண்மாய் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே கடந்தாண்டு போலவே இந்தாண்டும் காட்டாறு வெள்ளம் மற்றும் சிறுமலையாறு நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் உபரி நீரை அன்னசமுத்திர கன்மாயில் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post 50 கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் அன்னசமுத்திர கண்மாயில் மழைநீரை சேகரிக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Annasamudra Kanmai ,Nilakottai ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...