×

மிஷன் 2030 குறித்து புலம்பெயர்ந்த ராஜஸ்தானியர்களுடன் முதல்வர் கெலாட் சந்திப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது ‘மிஷன் 2030’ குறித்து ஐதராபாத்தில் வசிக்கும் புலம்பெயர்ந்த ராஜஸ்தான் தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், “ராஜஸ்தான் மிஷன் 2030 என்பது அம்மாநில முதல்வரான தனது தொலைநோக்கு பார்வையில் ராஜஸ்தானை இந்தியாவின் முதல் மாநிலமாக மாற்றுவதாகும். இது ராஜஸ்தானை 10 மடங்கு வளர்ச்சி அடைய ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் மாநில மக்கள் மற்றும் புலம்பெயர்ந்த ராஜஸ்தானியர்கள் ஒன்றிணைந்து பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆலோசனைகள், பரிந்துரைகளை ஆன்லைன் மூலமும் இதர வழிகளிலும் வழங்கும்படி மக்களை கேட்டுக் கொண்டார். ராஜஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற பிரபல ஜிடி பிர்லா, ஜம்னாலால் பஜாஜ் போன்றோர் நாட்டின் சுதந்திர இயக்கத்தில் மகாத்மா காந்தியுடன் முக்கிய பங்காற்றினர் என்று கூறிய முதல்வர் கெலாட், தனது முதல் 5 ஆண்டு ஆட்சியில் நிறுவப்பட்ட ராஜஸ்தான் பவுண்டேஷன் அமைப்பு ராஜஸ்தான் மக்களுக்கும் புலம்பெயர்ந்த ராஜஸ்தானியர்களுக்குமான உறவை வலுப்படுத்தியது,” என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “ராஜஸ்தானின் ஜிடிபி 2023-24 நிதியாண்டில் ரூ.15 லட்சம் கோடியை எட்டும். இது 2030ம் ஆண்டில் ரூ.30 லட்சம் கோடியை அடைய வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிடப்பட்டுள்ளது. வட இந்தியாவில் ராஜஸ்தான் கவரக் கூடிய 11.04 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளது. மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியிலும் முன்னோடியாக உள்ளது. மாநிலத்தில் 1.50 லட்சம் கிலோ மீட்டருக்கு சாலை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

கல்வியில் சிறந்து விளங்க வழங்கப்படும் ராஜிவ் காந்தி உதவித்தொகையின் மூலம் 500 மாணவர்கள் வெளிநாடுகளில் படித்து வருகின்றனர். மாநிலத்தில் பெண்களுக்கு 130 கல்லூரிகள் உள்பட 303 புதிய கல்லூரிகள் கட்டப்பட உள்ளன. ராஜஸ்தானில் புகழ்பெற்ற ஐஐடி, ஐஐஎம், சட்டப் பல்கலைக் கழகம் உள்பட 92 பல்கலைக் கழகங்கள் உள்ளன. பணவீக்கத்தினால் அவதிப்படும் 1.94 கோடி குடும்பங்களுக்கு மலிவு விலையில் கேஸ் சிலிண்டர், அன்னபூர்ணா உணவு பாக்கெட் வழங்குதல் உள்பட 10 நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி உள்ளது. அரசின் கொள்கைகளினால் ஏழ்மை மாநிலமாக அடையாளப்படுத்தப்பட்டு இருந்த ராஜஸ்தான் தற்போது செழிப்புடைய மாநிலமாக மாறியுள்ளது,” என்று தெரிவித்தார்.

The post மிஷன் 2030 குறித்து புலம்பெயர்ந்த ராஜஸ்தானியர்களுடன் முதல்வர் கெலாட் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : CM ,Kelat ,Mission ,Jaipur ,Rajasthan ,Chief Minister ,Ashok Kelad ,Hyderabad ,
× RELATED மஹாராஷ்டிராவில் 29 மாநகராட்சிகளுக்கான...