×

திருச்செந்தூரில் மீண்டும் மீண்டும் தோண்டப்படும் சாலைகள் பொதுமக்கள் கடும் அவதி

உடன்குடி, செப். 7: திருச்செந்தூரில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு, கழிவுநீர் குழாயில் உடைப்பு என மீண்டும் மீண்டும் சாலைகள் தோண்டப்படுவதால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு செல்லும் சாலையில் அரசு மருத்துவமனை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர், கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு எப்போதும் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கிய நிலையில் கிடந்தது. அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், பொதுமக்கள் அதிக நடமாட்டம் மிகுந்த பகுதியாக இருந்தாலும் அந்த வழியே செல்லும் அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. தண்ணீர் தேங்கியே கிடந்ததால் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சென்று வர கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

இதையடுத்து நடந்த போராட்டத்தால் பள்ளங்களை கற்களை போட்டு மூடினர். தொடர்ந்து தூத்துக்குடி கலெக்டரின் நடவடிக்கையால் சாலையை சீரமைத்தனர். இந்நிலையில் நேற்று திடீரென குடிநீர் குழாயில் உடைப்பு என அந்த பகுதியில் மீண்டும் ஜேசிபி மூலம் ராட்சத பள்ளம் தோண்டி சாலையில் மணல், கற்களை குவித்து வைத்தனர். இதனால் சாலையில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இவ்வாறு தொடர்ந்து பல நாட்களாக ஒரே பகுதியில் குழாய்கள் தொடர்ந்து உடைந்து அதை சீரமைப்பதற்கென அரசு பணம் நாள்தோறும் வீணடிக்கப்பட்டு வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையிட்டு வரும் நாட்களில் இது போன்ற நிலை ஏற்படாத வண்ணம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருச்செந்தூரில் மீண்டும் மீண்டும் தோண்டப்படும் சாலைகள் பொதுமக்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Tiruchendur ,Udengudi ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...