×

மாறிவரும் சூழலில் மாணவர்களை நல்வழிப்படுத்தி கல்வி சேவையில் தங்களை அர்ப்பணிக்கும் ஆசிரியர்கள்

பெரம்பூர்: மாதா, பிதா, குரு, தெய்வம் என நம் முன்னோர்கள் நமக்குக் கற்று கொடுத்துள்ளனர். ஒரு குழந்தை பிறந்து, தனது தாய் தந்தையருக்கு பிறகு குருவைத்தான் மூன்றாவதாக வணங்க வேண்டும் என அவர்கள் நமக்கு கற்றுக் கொடுத்துச் சென்றுள்ளனர். அதற்கு பிறகு தான் தெய்வத்தை வைத்தார்கள். இப்படி குருவிற்கு நம் முன்னோர்கள் கொடுத்த மரியாதை, அந்த காலகட்டத்தில் கல்வி கற்க சென்ற மாணவ, மாணவியர் குருவிடம் வைத்திருந்த மரியாதை இவையெல்லாம் வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்வதற்காக புராண காலத்தில் நடைபெற்ற விஷயங்களை பல்வேறு நூல்களாக தொகுத்து வழங்கியுள்ளனர்.

அதனை தற்போதுள்ள மாணவர்கள் எடுத்து படித்தால், அந்த காலகட்டத்தில் ஆசிரியரிடம் மாணவர்கள் எதுபோன்ற மரியாதையை வைத்திருந்தனர் என்பது நமக்குத் தெரிய வரும். ஒரு காலகட்டத்தில் பள்ளிக்கு அனுப்பும் குழந்தைகளை பெற்றோர்கள் குறிப்பிட்ட அந்த ஆசிரியர்களிடம் நன்றாக படிக்கவில்லை என்றால் கண்ணை மட்டும் விட்டு விடுங்கள், மற்றபடி நீங்கள் எந்த தண்டனை கொடுத்தாலும் பரவாயில்லை என கூறுவார்கள். இதனை நம் முன்னோர்கள் கண்டிப்பாக கேட்டிருப்பார்கள்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் குழந்தையை வீட்டுப்பாடம் செய்யவில்லை என வகுப்பறையில் நிற்க வைத்தால் கூட அந்த குழந்தை வீட்டில் வந்து தனது பெற்றோரிடம் குறை சொல்கிறது. மறுநாள் பெற்றோர்கள் குறிப்பிட்ட ஆசிரியரிடம் சென்று சண்டை போடுகிறார்கள். இதனை எல்லாம் நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. அந்த குழந்தையை தண்டிக்க வேண்டும் என்ற எந்த ஒரு தனிப்பட்ட காரணமும் அந்த ஆசிரியருக்கு இல்லை. குழந்தை நன்றாக படிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக சிறுசிறு தண்டனைகளை தருகிறார்கள். ஆனால் அதைக்கூட ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு காலகட்டத்தில் இன்றைய பெற்றோர்கள் உள்ளனர். இதன் காரணமாகவே பல பள்ளிகளிலும், ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பதை நிறுத்தி விட்டார்கள். மேலும் பள்ளிக்கு வந்து, பாடத்தை மட்டும் எடுத்து முடித்துவிட்டு, எங்கள் வேலை முடிந்தது எனச் சொல்லும் அளவிற்கு அவர்களது மனநிலை வந்துவிட்டது.

இதற்கு தற்போதுள்ள மாணவர்களின் மனநிலை மற்றும் பெற்றோர்களின் மனநிலையும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஒரு மாணவனை எப்படியாவது கஷ்டப்பட்டு படிக்க வைத்து அவனை பெரிய ஆளாக்கி விட வேண்டும் என ஆசிரியர்கள் கருதுவதுண்டு. இதன் காரணமாக குறிப்பிட்ட அந்த வகுப்பறையில் எத்தனை பேர் நன்றாக படிக்கிறார்கள், எத்தனை மாணவர்கள் சுமாராக படிக்கின்றனர், எத்தனை பேரிடம் கல்வித் திறன் குறைபாடு உள்ளது என்பதை நன்றாக கண்டறிந்து அதற்கு ஏற்ற வகையில் அவர்களை ஆசிரியர்கள் வழிநடத்தி வந்தனர்.

இந்த காலகட்டம் தற்போது மாறிவிட்டது. குறிப்பிட்ட மாணவர்களை மட்டும் ஏன் அதிகமாக வேலை வாங்குகிறீர்கள் எனக் கேட்டு பெற்றோர்கள் செய்யும் அடாவடி காரணமாக அனைவரையும் ஒரே மாதிரி ஆசிரியர்கள் பார்க்க வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதன் விளைவு நன்றாக படிக்கும் மாணவர்கள் படித்து அடுத்தடுத்த நிலையை அடைந்து விடுகின்றனர். ஆனால் ஒரு வகுப்பறையில் கல்வித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகள் அடுத்தடுத்த நிலைக்குச் செல்ல முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்.

இதற்கு எந்த வகையிலும் ஆசிரியர்கள்தான் காரணம் என்று நாம் கூற முடியாது. ஏனென்றால் தற்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் ஆசிரியர்களுக்கு அதிகப்படியான மன அழுத்தத்தை கொடுத்து வருகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில் குறிப்பாக கொரோனா கால கட்டத்திற்கு பிறகு மாணவர்களின் நடத்தையில் பல்வேறு மாற்றங்களை ஆசிரியர்கள் கண்கூடாக பார்க்கின்றனர். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு ஆசிரியர்கள் வந்து பாடம் நடத்தினால் மட்டுமே நமக்கு பாடத்தின் தன்மை புரியும். ஆனால் தற்போது என்ன பாடம் எடுக்கிறார்களோ, அது அப்படியே யுடியூபில் வந்து விடுகிறது. இதனால் வகுப்பறையில் ஆசிரியருக்கு மாணவர்கள் கொடுத்த முக்கியத்துவம் படிப்படியாக குறைந்து வருகிறது.

வகுப்பறைக்குச் செல்லவில்லை என்றால் நாம் பாடத்தை முறையாக கற்க முடியாது என்று இருந்த காலம் மாறி, இன்று யுடியூப் மற்றும் பள்ளிகளால் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மாணவர்கள் கையாளுகின்றனர். இதனால் வகுப்பறையில் ஆசிரியர்கள் முக்கியத்துவம் பற்றி மாணவர்கள் முழுமையாக அறிந்து கொள்ளாமல் அவர்களுக்கு உண்டான உரிய மரியாதையை கொடுக்க மறுக்கின்றனர்.
முக்கியமாக மாணவர்களுக்கு கல்வியுடன் அறநெறி கதைகள், ஒழுக்கம், சமூக சிந்தனை, ஒற்றுமை உள்ளிட்ட வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொடுத்தனர். ஆசிரியர்களின் பேச்சை கேட்டு, வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் ஏராளம்.

ஆனால், இன்று அந்த நிலை குறைந்து வருகிறது. மாணவர்களின் மரியாதை குறைவான செயல், பெற்றோரின் கண்டிப்பு என எதையும் பெரும்பாலும் ஆசிரியர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. எங்கள் பணியை நாங்கள் செய்கின்றோம், மரியாதையை பெரிதாக எதிர்பார்க்கவில்லை, ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் மட்டும் நடவடிக்கை எடுக்கின்றோம் எனச் சொல்லிவிட்டு சென்று விடுகின்றனர். ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் என பலரை உருவாக்கும் ஆசிரியர்கள் ஆலமரத்தின் வேர் போன்று அமைதியாக இருந்துவிட்டுச் சென்று விடுகின்றனர். வருங்காலங்களில் பள்ளிகள் இல்லாத கணினி வழிக் கல்வி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அப்போது அந்த கணினி வழிக் கல்வியை கூட ஒரு ஆசிரியர்தான் எடுக்க வேண்டும். கரும்பலகையில் எழுதி பழகியது தொடங்கி படிப்படியாக கல்வி முறையில் பல்வேறு வளர்ச்சிகள் அடைந்து இன்று ஸ்மார்ட் வகுப்பறை வரை தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. வேண்டிய தகவல்களை இணையத்தில் நொடி பொழுதில் அறியும் வந்துள்ளது. அதற்கு ஏற்ப ஆசிரியர்களும் தங்களை அப்டேட் செய்து கொண்டுதான் வருகின்றனர். இந்த காலகட்டத்தில் ஆசிரியர்கள் வகுப்பறைக்குச் சென்று ஒரு பாடம் எடுப்பதற்கு முன்னர் தங்களை முதலில் அந்த பாடத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் நன்கு கற்று தயார் செய்து கொண்டுதான் வகுப்பறைக்குள் செல்கின்றனர். ஏனென்றால் முன்பெல்லாம் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும்போது தான் மாணவர்கள் அந்த பாடத்தை பற்றி தெரிந்து கொண்டனர்.

ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் செல்போன் மற்றும் இணையதள சேவைகளின் அசுர வளர்ச்சியால் மாணவர்கள் வகுப்பறைகளில் ஆசிரியர்களை விட அதிக அப்டேட்டில் உள்ளனர். இதனால் ஆசிரியர்களும் அவர்களுக்கு ஈடு கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு காலகட்டத்தில் மாணவர்கள் ஆசிரியர்களை மட்டுமே நம்பி இருந்த காலம் மாறி தற்போது அறிவியலின் அபரிவிதமான வளர்ச்சியால் ஆசிரியர்கள் இல்லாமல் கல்வி கற்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

எது எப்படி மாறினாலும் நமது கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் ஏற்ற வகையில் தன்னிடம் படிக்கும் மாணவர்களை ஏற்றிவிட்டு, அழகு பார்க்கும் ஆசிரியர்களுக்கு தற்போதுள்ள மாணவர்கள் குறைந்தபட்ச மரியாதையாவது தரவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.ஆண்டுதோறும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் பிப்ரவரி 28, மே 15, அக்டோபர் 5 என வெவ்வேறு தேதிகளில் உலக நாடுகள் ஆசிரியர் தினத்தை கொண்டாடி வருகின்றன. நமது இந்தியாவில் செப்டம்பர் 5ம் தேதி அதாவது இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

பல ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக தனது இறுதி காலம் வரை வாழ்ந்து காட்டிய தத்துவ மேதையான டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1962ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஏனைய பள்ளிகளில் மாணவ, மாணவிகள் ஆசிரியர்களுக்கான கலை நிகழ்ச்சிகளை நடத்தி ஆசிரியர்களை கவுரவித்து அனுப்பி வைப்பது வழக்கம்.

அந்த காலம் முதல் இன்று வரை பல்வேறு மாற்றங்களை கண்ட ஆசிரியர்களின் நிலை குறித்து கொளத்தூரில் உள்ள எவர்வின் பள்ளி குழுமத்தின் மூத்த முதல்வர் புருஷோத்தமன் கூறுகையில், ‘‘தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு மாணவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்பட்டுள்ளது. அந்த கவனச் சிதறலின் விளைவு தற்போது எப்படி உள்ளது என்றால், ஒரு பாடத்தை கற்றுக் கொள்வதற்கு நாங்கள் ஆசிரியர்களை மட்டும் நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற ஒரு நிலைக்கு தற்போது மாணவர்கள் வந்துள்ளனர்.

எங்களுக்கு கூகுள் உள்ளது, யுடியூப் உள்ளது என்ற நிலையில் மாணவர்கள் உள்ளனர். ஒரு காலகட்டத்தில் அறிவை கற்றுத் தருவதற்கு ஆசிரியர்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற நிலை இருந்தது. அந்த காலகட்டத்தில் பெரிய நூலகங்கள், புத்தகங்கள் கூட இல்லை. இதனால் முழுக்க முழுக்க மாணவர்கள் ஆசிரியர்களை நம்பி இருந்தனர். இதனால் கல்வி கற்பதற்கு ஆசிரியர்களை தவிர வேறு வழி இல்லை என்ற காலகட்டத்தில் மிகவும் பயபக்தியோடு கல்வி கற்றனர். ஆனால் தற்போது வீட்டில் உள்ள பெற்றோர்கள் நன்கு படித்துள்ளார்கள். மேலும் சமூக வலைதளங்கள் உள்ளன. மாணவர்கள் பயன்படுத்தும் செல்போனில் விரல் நுனியில் அவர்களது அறிவு உள்ளது. இதனால் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவது இல்லை. இது எந்த வகுப்புகளில் அதிகமாக நடக்கிறது என்று பார்த்தால் 6ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை இந்த பிரச்னை இருந்து வருகிறது. எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வேறு பிரச்னை உள்ளது.

தேர்வு விடைத்தாள் திருத்தும் போது இன்னும் அந்த காலகட்டத்தில் உள்ளது போன்று மிகக் குறைந்த அளவு ஊதியத்தை ஆசிரியர்களுக்கு தருகிறார்கள். இது மாற்றியமைக்கப்பட வேண்டும். இதேபோன்று ஆசிரியர்களை மற்ற பணிகளுக்கு ஈடுபடுத்துகின்றனர். இதனையும் தவிர்க்க வேண்டும். இதேபோன்று சில தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கும் சூழ்நிலை இருந்தும், கொடுக்கப்படாமல் உள்ளது. இதனை அரசு தலையிட்டு சரி செய்ய வேண்டும்.

இதேபோன்று தனியார் பள்ளிகளில் கல்வி கற்றுத் தரும் ஆசிரியர்கள் 10 ஆண்டுகள் நிறைவு செய்து விட்டால் அதற்கான உரிய அங்கீகாரம் அவரிடம் உள்ளது என்றால் அவர்களுக்கு அரசாங்கம் மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையையை ஒதுக்கி அவர்களுக்கு சம்பளமாக வழங்க வேண்டும். பள்ளி நிர்வாகம் கொடுக்கின்ற சம்பளம் போக ஆசிரியருக்கு கூடுதல் வருமானமும் வரும். இது தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உதவியாக இருக்கும். கல்விக்காக ரூ.25 ஆயிரம் கோடி செலவு செய்யும் அரசு இதனையும் செய்து கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும். இதேபோன்று ஆசிரியர்களுக்கு என்று மருத்துவ காப்பீடு உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும்,’’ என்றார்.

தற்போதுள்ள சூழலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நிலை குறித்து திருத்தங்கல் நாடார் கல்லூரியின் முதல்வர் தேவி கூறுகையில், ‘‘செல்போன் கலாச்சாரம் அதிகரித்த பின்பு மாணவர்களின் செயல்பாடுகளில் மாற்றம் வந்துள்ளது. அதே நேரத்தில் மாணவர்களின் அறிவுத்திறன் அதிகரித்துள்ளது. நாங்கள் படிக்கின்றபோது நிறைய விஷயங்கள் எளிதாக எங்களுக்கு கிடைக்கவில்லை. ஒரு சிறிய விஷயத்தை கற்றுக் கொள்வதற்கும் பல புத்தகங்களை புரட்ட வேண்டும். ஆனால் தற்போது அனைத்துமே அவர்களுக்கு செல்போன் வாயிலாக எளிதில் கிடைத்து விடுகிறது. இதனால் கல்லூரிகளில் பாடம் எடுக்கப் போகும் போது பேராசிரியர் தங்களை முதலில் தயார் செய்துகொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இன்டர்நெட் வசதியின் மூலம் நிறைய நல்ல விஷயங்கள் தற்போதுள்ள தலைமுறைக்கு கிடைக்கின்றது. சிலர் அதை தவறாகவும் பயன்படுத்தி வருகின்றனர்,’’ என்றார்.

The post மாறிவரும் சூழலில் மாணவர்களை நல்வழிப்படுத்தி கல்வி சேவையில் தங்களை அர்ப்பணிக்கும் ஆசிரியர்கள் appeared first on Dinakaran.

Tags : Perampur ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...