×

குலசேகரன்பட்டினம் அனல்மின் நிலைய விரிவாக்கத்திற்கு விளைநிலத்தை கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு

*கந்தபுரத்தில் ஆலோசனை

உடன்குடி : குலசேகரன்பட்டினம் பகுதியில் அனல்மின் நிலைய விரிவாக்கத்திற்கு விவசாய நிலம் கையகப்படுத்துவற்கு எதிர்ப்பு தெரிவித்து உடன்குடி பொதுநலக்குழு சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.தூத்துக்குடி மாவட்டத்தில் தென்கோடியில் உள்ள உடன்குடி பகுதியை மையமாக கொண்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பல ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தி அனல்மின் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கு எதிரிலுள்ள கடலில் சுமார் 8.5 கிமீ தொலைவிற்கு நிலக்கரி இறங்குதள துறைமுகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. துறைமுகம், அனல்மின் நிலையம் அமைக்கும் பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் முடியும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில் உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்கத்திற்கு சுமார் 1500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. குலசேகரன்பட்டினம் கூடல்நகர், அமராபுரம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகளும் நடந்து வரும் நிலையில், இதே பகுதியில் ஏரோஸ்பேஸ் தொழிற்சாலை அமைக்க இருப்பதாகவும் அதற்கு தேவையான சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடன்குடி அருகேயுள்ள கந்தபுரம் சுடலை கோயில் வளாகத்தில் வைத்து உடன்குடி பொதுநலக்குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.

தெற்கு மாவட்ட மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் நல அமைப்பு தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். சாத்தான்குளம் ஒன்றிய பாஜ தலைவர் சரவணன், வக்கீல் ரூபஸ் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்தனர்.

அப்போது ராக்கெட் ஏவுதளம், அனல்மின் நிலையம் ஆகியவற்றால் கடுமையான பாதிப்பு ஏற்படும் என கூறினர். கூட்டத்தில் முன்னாள் யூனியன் துணை சேர்மன் ராஜதுரை, ஆசிரியர் சிவலூர் ஜெயராஜ், மக்கள் நலன் காக்கும் இயக்கம் முகைதீன், மணப்பாடு வினோஜின் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post குலசேகரன்பட்டினம் அனல்மின் நிலைய விரிவாக்கத்திற்கு விளைநிலத்தை கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kulasekaranpattinam ,Kandapuram ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...