- பெரம்பூர்
- ராம்பால்
- ஹைடர் கார்டன் தெரு, ஜமாலியா
- ஓட்டேரி, சென்னை
- புளியந்தோப்பு நெடுஞ்சாலை, மெட்டுபாளையம்
பெரம்பூர்: சென்னை ஓட்டேரி அருகே ஜமாலியா, ஹைதர் கார்டன் தெருவை சேர்ந்தவர் ராம்பால் (31). புளியந்தோப்பு நெடுஞ்சாலை, மேட்டுப்பாளையம் பகுதியில் அடகு கடை தொழில் நடத்தி வருகிறார். இந்த கடையில் கடந்த ஒரு வருடத்துக்கு முன் மொபைல் ரீசார்ஜ் செய்வதற்காக புதுப்பேட்டை, அய்யாசாமி தெருவை சேர்ந்த சீனி ஜாபர் அலி (46) என்பவர் வந்து ராம்பாலுக்கு அறிமுகமாகியுள்ளார். மேலும், அவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
கடந்த ஜூலை 20ம் தேதி அடகு கடைக்காரர் ராம்பாலை சீனி ஜாபர் அலி செல்போனில் தொடர்பு கொண்டு, தனது அத்தை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவரின் மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டதால், தாம்பரத்தில் சோபா சந்த் என்பவரின் அடகுக் கடையில் ₹10 லட்சத்துக்கு நகைகளை அடகு வைத்துள்ளேன். தற்போது அந்நகைகளை என்னால் மீட்க முடியவில்லை. அதனால் நீங்கள் அந்நகைகளை மீட்டு வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நான் உங்களிடம் பணம் கொடுத்து வாங்கிக் கொள்கிறேன் என சீனி ஜாபர் அலி கூறியுள்ளார்.
இதை நம்பிய ராம்பால், சீனி ஜாபர் அலியுடன் தாம்பரத்துக்கு சென்று, அடகு கடைக்காரர் சோபா சந்த்திடம் ₹10 லட்சம் கொடுத்து நகைகளை மீட்டுள்ளனர். பின்னர் அந்நகைகளை பெங்களூரில் ஒரு தனியார் வங்கியில் ராம்பால் அடகு வைத்து, ரூ.10 லட்சத்தை கடனாகப் பெற்றுள்ளார். அதன்பிறகு 2 முறை ராம்பாலின் அடகுக் கடையில் நகைகளை அடகு வைத்து, முறையே ₹1.10 லட்சம் மற்றும் ₹2.20 லட்சத்தை சீனி ஜாபர் அலி பெற்றிருக்கிறார். இதைத் தொடர்ந்து சீனி ஜாபர் அலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்று வருவது குறித்து ராம்பாலுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பின்னர் சீனி ஜாபர் அலி அடகு வைத்த தங்க நகைகளை ராம்பால் முறையாக ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வில், சீனி ஜாபர் அலி அடகு வைத்த நகைகள் அனைத்தும் போலி என அடகு கடைக்காரர் ராம்பாலுக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பெங்களூரில் தனியார் வங்கியில் அடகு வைத்த நகைகளை ₹10 லட்சம் கொடுத்து ராம்பால் மீட்டு வந்துள்ளார். பின்னர் சீனி ஜாபர் அலியை செல்போனில் தொடர்பு கொண்டு, தனது கடைக்கு வருமாறு ராம்பால் அழைப்பு விடுத்துள்ளார்.
இதையடுத்து நேற்றிரவு ராம்பாலின் அடகு கடைக்கு சீனி ஜாபர் அலி தனது 2 நண்பர்களுடன் வந்துள்ளார். அவர்களை கடையின் உள்ளே உட்கார வைத்து பூட்டிவிட்டு, இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்துக்கு ராம்பால் தகவல் தெரிவித்தார். சீனி ஜாபர் அலி, அவரது நண்பர்களான ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சாய்த்தலு (41), ஜனகலகண்ட ஜெயா ராஜு (44) ஆகிய 3 பேரையும் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.
அப்போது, நான் ராம்பாலிடம் அடகு வைத்த அனைத்து நகைகளும் போலி கிடையாது. அவை தங்க நகைகள்தான். அவற்றை நான் பணம் கொடுத்து மீட்டு கொள்கிறேன் என போலீசாரிடம் சீனி ஜாபர் அலி கூறி வருகிறார். இதுகுறித்து பிடிபட்ட 3 பேரிடம் ஓட்டேரி போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
The post போலி நகை அடகு வைத்து ₹13 லட்சம் மோசடி: 3 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.