சென்னை: ‘‘சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் செப்டம்பர் 1ம் தேதி முதல் போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்படும்’’ என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், கிருஷ்ணாம் பேட்டை வி.ஆர்.பிள்ளை தெரு மயான பூமியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிரத் தூய்மைப் பணிகள், பெசன்ட் சாலையில் சாலையோரக் கடைகளில் அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகள் அகற்றும் பணியினைப் பார்வையிட்டு பணியில் ஈடுபட்டு தூய்மைப் பணியினை மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. மேலும் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 358 மாடுகள் பிடிக்கப்பட்டாலும், கபாலீஸ்வரர் கோயில், கோயம்பேடு, திருவான்மியூர் கோயில் ஆகிய இடங்களில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இனி, அபராத தொகையினை அதிகரிக்கப்படும். மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக 1,038 வாகனங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
தற்பொழுது ஆங்காங்கே வாகனங்களை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்த வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும். தற்போது பொது இடங்களில் உள்ள 18,000 வாகன நிறுத்தங்களை 2லட்சமாக அதிகரிக்க 10 இடங்களில் பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மயானபூமிகளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வதற்காகவும், சுத்தம் செய்து தூய்மையாகப் பராமரிப்பதற்காகவும் நடவடிக்கையில் இறங்கி பணிகள் மேற்கொள்ளுதல் மூலம் தீவிரத் தூய்மைப் பணியானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியில் 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள இடத்தில் 42 மயானபூமிகள் உள்ளன. ஈஞ்சம்பாக்கத்தில் மயானபூமி அமைக்க ஒப்பந்தப்புள்ளி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மற்ற 37 இடங்களில் உள்ள மயானபூமிகளில் காணப்படும் செடிகள், கொடிகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட 17 மயானபூமிகளில் நேற்று சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுள்ளது. படிப்படியாக அனைத்து மயானபூமிகளிலும் சீரமைப்புப் பணியானது நடவடிக்கைகளில் இறங்கி பணிகளை மேற்கொள்ளுதல் மூலம் தீவிரத் தூய்மைப் பணியின் கீழ் மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
The post சாலை, தெருக்களில் நீண்ட நாட்களாக உள்ள வாகனங்கள் செப்.1ம் தேதி முதல் போர்க்கால அடிப்படையில் அகற்றப்படும்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு appeared first on Dinakaran.
