நெல்லை: நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை கேடிசி நகர், கீழநத்தம் வடக்கூரைச் சேர்ந்தவர் ராஜாமணி (30). அங்கு பெட்டிக் கடை நடத்தி வந்தார். கீழநத்தம் ஊராட்சி கவுன்சிலராகவும், கீழநத்தம் வடக்கூர் பகுதி திமுக பொருளாளராகவும் இருந்து வந்தார். 25க்கும் மேற்பட்ட ஆடுகளை அவரது குடும்பத்தினர் வளர்த்து வருகின்றனர். இவரது மனைவி சுடலைவடிவு (25). நேற்றுமுன்தினம் மாலை 4 மணி அளவில் வெள்ளிமலை பஸ் நிறுத்தம் அருகே பழைய புறக்காவல் நிலையம் பின்பகுதியில் உள்ள வயல்களில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை ஓட்டிக் கொண்டு ராஜாமணி வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த கும்பல், ராஜாமணியை மறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. அப்பகுதியினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நெல்லை எஸ்பி சிலம்பரசன் இதுகுறித்து விசாரித்தார். கொலை நடந்த வடக்கூரில் சுடலைமாட சுவாமி கோயில் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கீழநத்தம் தெற்கூரைச் சேர்ந்த இசக்கி பாண்டி (25), மேலூரைச் சேர்ந்த மாயாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கீழநத்தம் வடக்கூருக்கு இருவரும் வந்து, மது அருந்தியுள்ளனர். இதை அங்கு ஆடு மேய்ச்சலுக்காக சென்ற ராஜாமணி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இசக்கிபாண்டியும், மாயாண்டியும் அரிவாளால் ராஜாமணியை வெட்டிக் கொன்றது தெரியவந்தது.
The post மது குடித்ததை தட்டிக்கேட்ட திமுக கவுன்சிலர் படுகொலை: 2 பேர் கைது appeared first on Dinakaran.