![]()
பண்ருட்டி: தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தொண்டர்களுக்கு வழங்கிய வெஜிடபிள் பிரியாணியில் மீதமானவற்றை பொதுமக்களுக்கு வழங்கிய நிலையில் அதனை சாப்பிட்ட 30 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு அதிக பட்சம் இழப்பீடுத்தொகை, நிரந்தரவேலை வழங்க வேண்டும், விளை நிலங்களை இயந்திரங்களை கொண்டு அழித்த என்எல்சி நிர்வாகத்தை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக சார்பில் நேற்று கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்காக பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் விருத்தாசலம் சென்று போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் தொண்டர்களுக்கு மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணி செய்து கொடுத்துள்ளனர். அதில் மீதி இருந்த பிரியாணியை பண்ருட்டி அருகே முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் வைத்து நேற்று இரவு 7 மணி அளவில் கோயில் பிரசாதத்துடன் சேர்த்து பொதுமக்களுக்கு கொடுத்துள்ளனர். இதை சாப்பிட்ட கிராம மக்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த அருள்பாண்டி (21), இளமாறன் (10), மீனா (29), கஸ்தூரி (55), சுரேஷ் (11), நகிலன் (12), பரணிதரன் (12), சுரேஷ் (11), ஞானவேல் (5) உள்பட 30 பேர் தற்போது பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் பொதுமக்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.
The post தேமுதிகவினருக்கு தயார் செய்த வெஜ் பிரியாணி சாப்பிட்ட 30 பேருக்கு வாந்தி, மயக்கம் appeared first on Dinakaran.
