சேத்தியாத்தோப்பு, ஆக. 1: வளையமாதேவி கிராமத்தில் போராட்டம், எதிர்ப்புகளுக்கு இடையே நேற்று 5வது நாளாக என்எல்சி சார்பில் கால்வாய் வெட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணியை துவங்க முடிவு செய்து கத்தாழை, கரிவெட்டி, மும்முடிசோழகன், சாத்தப்பாடி, ஊ.ஆதனூர் உள்ளிட்ட 7 கிராமங்களில் 2011ம் ஆண்டில் சுரங்க விரிவாக்க பணிக்காக நிலங்களை என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்தியது. அப்போது ஏக்கருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடாக நிர்ணயம் செய்து வழங்கியது.
கூடுதல் இழப்பீடு, குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலை கேட்டு வந்த நிலையில் கடந்த 26ம் தேதி வளையமாதேவி கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் என்எல்சி நிறுவனம் வாய்க்கால் வெட்டும் பணிகளை துவக்கியது. முதல்நாள் 35 பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் 10க்கும் மேற்பட்ட ராட்சத கனரக பொக்லைன் இயந்திரங்களை கொண்டு என்எல்சி நிர்வாகத்தினர் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி வளையமாதேவி கிராமத்தில் புதிய பரவனாறு வாய்க்கால் வெட்டும் பகுதியினருகே நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கால்வாய் ஓரத்தில் சிமெண்ட் கட்டை அமைக்கும் பணிக்காக ஏராளமான டிப்பர் லாரிகளில் எம்.சாண்ட் மணல், சிமெண்ட் கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது. இது தவிர சாலை அமைக்கும் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது. ஆங்காங்கே போராட்டம் நடந்து வருவதால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
The post போராட்டம், எதிர்ப்புகளுக்கு இடையே 5வது நாளாக கால்வாய் வெட்டும் பணியில் என்எல்சி தீவிரம் appeared first on Dinakaran.
