×

மாற்றுத்திறனாளி வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை, பணம் திருட்டு பட்டப்பகலில் துணிகரம்

மயிலம், மார்ச் 27: மயிலம் அடுத்துள்ள கீழ்எடையாளம் கிராமம், காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பெரியதம்பி மகன் முருகன் (36) மாற்றுத்திறனாளி. இவர் தனது வீட்டில் சிறிய அளவில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். விவசாயமும் செய்து வருகிறார். இவருடைய மனைவி ஷீலா, சென்னையில் நர்சாக வேலை செய்து வருகின்றார். இவர்களுக்கு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் வீட்டில் தனியாக வசித்து வரும் முருகன் நேற்று வீட்டை பூட்டிவிட்டு விவசாய நிலத்திற்கு சென்று வேலைகளை முடித்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த முருகன் வீட்டினுள் சென்று பார்த்தபோது அறையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோவின் பூட்டையும் உடைத்து நெக்லஸ், சரடு, தாலி சங்கிலி, மோதிரம் உட்பட 9 பவுன் தங்க நகை மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து முருகன் உடனடியாக மயிலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரித்து வருகின்றனர். சிசிடிவி கேமரா காட்சிகள் மூலமும் தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இதே கிராமத்தில் கடந்த மாதம் 7 பவுன் தங்க நகை பட்டப்பகலில் திருடுபோனது குறிப்பிடத்தக்கது. மயிலம் பகுதியில் இதுபோன்ற தொடர் கொள்ளை சம்பவங்கள் நடப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags : Mayilam ,Murugan ,Gandhi Nagar ,Keelediyalam ,Sheela ,
× RELATED ரூ.80 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்