×

போதை மாத்திரைகள் வைத்திருந்த மருத்துவ கல்லூரி மாணவர் கைது

ரெட்டிச்சாவடி, மார்ச் 29:கடலூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட போலீசாருக்கு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் ரெட்டிச்சாவடியை அடுத்த புதுக்கடை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார், புதுக்கடை பைபாஸ் சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும்படி வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். போலீசார் வருவதைக் கண்ட அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தார். இருப்பினும் அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறவே சந்தேகம் அடைந்த போலீசார், அந்த வாலிபரை சோதனை செய்தனர். அப்போது அவரது பாக்கெட்டில் சிறுசிறு கஞ்சா பொட்டலங்களும், போதை மாத்திரைகளும் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது, கடலூர் மாவட்டம் வானமாதேவி அடுத்த பரிசமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஆதன்(21) என்பதும், இவர் தற்போது கிருமாம்பாக்கம் பகுதியில் தங்கி கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பி.பார்ம் 3ம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்தது.மேலும் இவர் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வாங்கி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனையில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து ஆதனை கைது செய்து அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா மற்றும் 200 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை எங்கு வாங்கினார் என்பது குறித்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

Tags : Reddychavadi ,SP Jayakumar ,Cuddalore district ,Pudukada ,Reddychavadi… ,
× RELATED சிதம்பரம் தொகுதியில் மஜக வேட்பாளராக மு.தமிமுன் அன்சாரி போட்டி