- தர்மபுரி
- பாகூர்
- செந்தில்
- நாரம்பாய் மேற்கு சாலை
- கிருமாம்பாக்கம்
- கிருமம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார மையம்
பாகூர், மார்ச் 25: கிருமாம்பாக்கம் அடுத்த நரம்பை மேற்கு வீதியை சேர்ந்தவர் செந்தில் (38). கிருமாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே நெட் சென்டர் நடத்தி வருகிறார். கடந்த 23ம் தேதி செந்தில் கடைக்கு வந்த ஒரு டிப் டாப் நபர் 50 ஆயிரம் ரூபாய் அவசரமாக தேவைப்படுகிறது. உங்கள் வங்கி கணக்கில் பணத்தை அனுப்புகிறேன். எனக்கு நீங்கள் கையில் கொடுக்க முடியுமா என கேட்டுள்ளார். செந்தில் தருவதாக கூறி உள்ளார். உடனே, அந்த நபர், பணத்தை வங்கி கணக்கில் அனுப்பி உள்ளதாக கூறியுள்ளார். மேலும் ரூ.50 ஆயிரத்தை அனுப்பியதற்கான செல்போனில் ஆதாரத்தை காட்டி 50 ஆயிரம் ரூபாயை பெற்றுகொண்டார். பின்னர் போனில் பேசுவதுபோல் அங்கிருந்து காரில் சென்றுவிட்டார். செந்தில் தனது வங்கி கணக்கை பார்த்தபோது அதில் பணம் வரவில்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கிருமாம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்தியா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பணத்தை பெற்று மோசடி செய்தது தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த சபரி (31) என்பதும், சொந்தமாக லோடு கேரியர் வைத்து தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து சபரியை, கிருமாம்பாக்கம் போலீசார் புதுச்சேரியில் அண்ணா சாலையில் மடக்கி பிடித்தனர். அவரை கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் கொண்டு வந்து நடத்திய விசாரணையில், அவர் மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். பணத்தை செலவழித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இவர், காரைக்கால், நாகப்பட்டினம், கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் இதேபோன்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் காரை பறிமுதல் செய்தனர்.
