×

கடலூரில் பெட்ரோல் விலை ரூ.6 திடீர் உயர்வு வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

கடலூர், மார்ச் 27: மேற்காசிய போர் காரணமாக கடலூர் மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வர்த்தக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் ஓட்டல்கள், உணவு தயாரிப்பு கூடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விறகு அடுப்பை பயன்படுத்தி சிலர் உணவு தயாரித்த போதிலும், சில கடைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதேபோன்று வீட்டு உபயோக சிலிண்டரும் புக்கிங் செய்தால் வருவதற்கு நீண்ட நாட்கள் ஆவதாக ஆங்காங்கே புகார்கள் எழுந்துள்ளன. பெட்ரோல், டீசலை பொருத்தவரை கடலூர் மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி கிடைத்து வருகிறது.

இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்பீடு பெட்ரோல் ரூ.2 உயர்ந்தது. சாதாரண பெட்ரோல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று கடலூர் மாவட்டத்தில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் விநியோகம் செய்யப்படும் பெட்ரோலின் விலை திடீரென ரூ.6 உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் இயங்கி வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்களை தவிர்த்து தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் பெட்ரோல் பங்குகளும் 100க்கும் அதிகமான இடங்களில் உள்ளன.

கடலூர் மாநகரில் கம்மியம்பேட்டை, முதுநகர் உள்ளிட்ட இடங்களில் தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தில் பெட்ரோல் பங்குகள் இயங்கி வருகின்றன. நேற்று காலை இங்கு பெட்ரோல் போட வாகன ஓட்டிகள் சென்றபோது, 1 லிட்டர் ரூ.108 ஆக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கும் பெட்ரோல் பங்குகளில் ரூ.102க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கேட்டபோது, எங்கள் பெட்ரோல் பங்க் தனியார் கார்ப்பரேட் மூலம் பெட்ரோல் வாங்கி விற்பனை செய்து வருகிறோம். எங்கள் தலைமையிடத்திலிருந்து விலையை உயர்த்தியுள்ளனர், என்றனர்.

Tags : Cuddalore ,Cuddalore district ,West Asian war ,
× RELATED ரூ.80 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்