×

பக்ரீத் பண்டிகை தலைவர்கள் வாழ்த்து

சென்னை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி(அதிமுக பொது செயலாளர்): அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும். இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும், எனது உளமார்ந்த பக்ரீத் திருநாள் வாழ்த்துகள். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: இறை நம்பிக்கையும், மனித நேயமும் பரவட்டும்; அமைதி நிலவட்டும், ஆனந்தம் பெருகட்டும்.
கே.எஸ்.அழகிரி( தமிழக காங்கிரஸ் தலைவர்): மத கோட்பாடுகளைப் போற்றி பாதுகாக்கிற வகையில் வாழ்ந்து வருகிற இஸ்லாமிய சகோதரர்களுக்கு நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துகள்.

ராமதாஸ்(பாமக நிறுவனர்): அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்; இல்லாதவர்களுக்கு உதவுங்கள் என்ற அந்த பாடத்தை அனைவரும் புரிந்து கொண்டால் உலகில் எங்கும் வெறுப்பு, மோதல், வன்முறை நிலவாது.  விஜயகாந்த்(தேமுதிக தலைவர்): தியாகத்தை போற்றும் புனித திருநாளான பக்ரீத் திருநாளில் இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்ற உயர்ந்த கொள்கையோடு உலகம் முழுவதும் கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): நபிகள் நாயகத்தின் தியாகத்தை நினைவு கூர்ந்து, அவர் பயணித்த நல்வழியில் பயணிக்க, இறைவன் துணை நிற்க வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோல் தமமுக தலைவர் ஜவாஹிருல்லா, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்டோரும் பக்ரீத் வாழ்த்து தெரிவித் துள்ளனர்.

* ஏழை-எளியோரின் பசிதீர்த்து கொண்டாடும் தியாகத்தின் திருநாள் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பக்ரீத் பெருநாள் வாழ்த்துச் செய்தி: சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி அன்புநெறி காட்டிய நபிகள் நாயகத்தின் வழி நடக்கும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள். ஏழை – எளியோரின் பசிதீர்த்துக் கொண்டாடும் தியாகத்தின் திருநாள் இது. இந்நாளில், ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகள்; பிறகு நண்பர்கள்; அடுத்துதான் தங்களுக்கு என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளித்து, பயன்படுத்திக் கொள்ளும் பண்பையும், மனிதநேயத்தையும் இசுலாமியப் பெருமக்கள் வெளிப்படுத்துகிறார்கள். இத்தகைய உயரிய நெறியினைக் கடைப்பிடித்து வரும் இசுலாமிய சமூகத்தினர் அனைவரும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி அன்பைப் பரிமாறிக் கொள்ளவும், நபிகளார் காட்டிய வழியில் அனைவரிடத்தில் அன்பு செலுத்திக் கருணை காட்டிடவும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

The post பக்ரீத் பண்டிகை தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Bakrit ,Chennai ,Edappadi Palaniswami ,ADMK ,General ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...