×

பல்வேறு உயிரினங்கள் வாழும் இடையபட்டி கோயில் காடு பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் மண்டலமாகுமா: அமைச்சர்கள் ஆய்வால் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மதுரை: அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வை தொடர்ந்து புள்ளிமான், தேவாங்கு, முள்ளெலி உள்ளிட்ட உயிரினங்கள் வாழும் இடையபட்டி கோயில் காடு வனம் பல்லுயிர் மண்டலமாகுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி மலையில் பல்வேறு அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகிறது. அங்குள்ள இயற்கை சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்வதால், அதனை, பல்லுயிர் மண்டலமாக தமிழ்நாடு அரசு முதன்முறையாக அறிவித்துள்ளது. இதேபோல், மாவட்டத்தில், இடையபட்டியில் வெள்ளிமலை காடு அமைந்துள்ளது. இது 500 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த காடு வருவாய்த்துறை பதிவேட்டில் தீர்வு ஏற்படாத தரிசு புறம்போக்கு நிலமாக உள்ளது.

ஆனால், இந்த பகுதி முழுவது வனப்பகுதியாகும். இது வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த காட்டில் ஒரு பகுதியை இந்திய-திபெத்திய எல்லை பாதுகாப்பு படை ராணுவ முகாம் மற்றும் மத்திய பாதுகாப்பு படை முகாம் அமைக்க வெள்ளிமலை கோயில் காடு அழிக்கப்பட்டுவிட்டது. தற்போது ஏறக்குறைய 200 ஏக்கர்தான் மீதியுள்ளது. இந்த காட்டில், 85 ஏக்கர் நிலத்தில், மதுரை மத்திய சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளது. மீதியுள்ள சுமார் 75 ஏக்கர் காட்டில், புள்ளிமான், அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு, முள்ளெலி, உடுப்பு, அலங்கு உள்ளிட்ட உயிரினங்கள் தற்போது வாழ்ந்து வருகிறது. மேலும் இந்த வனத்தில், நூற்றுக்கு மேற்பட்ட பெரிய அளவிலான கடம்ப மரங்கள், அரியவகை தாவர வகைகளும், 70 மேற்பட்ட பறவை இனங்களும், 30க்கு மேற்பட்ட வண்ணத்துப்பூச்சிகள் வாழ்ந்து வருகிறது.

இப்பகுதியில் உள்ள கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கு, கால்நடை வளர்ப்புக்கு இந்த வனத்தை பொதுமக்கள் மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தி வருகின்றனர். இங்குள்ள உயிரினங்கள், பூச்சிகள் மற்றும் மரங்களை பாதுகாக்க வேண்டும். அதற்கு, இந்த வனத்தை பல்லுயிர் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தெற்கு ஆமூர், இடையபட்டி உள்ளிட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், இந்த வனப்பகுதியை கடந்த இரண்டு நாளுக்கு முன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் நேரில் சென்று சுமார் இரண்டு மணி நேரம் வனத்தில் நடந்து சென்று, ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பல்வேறு வகையான உயிரினங்கள், பல்லுயிர் பூச்சிகள், பெரியளவிலான கடம்பவன மரம், விலங்குகள் தென்பட்டது. இதனால், அரிட்டாபட்டியுடன் இந்த பகுதியையும் பல்லுயிர் மண்டலமாக அறிவிப்பது தொடர்பாக முறையான ஆய்வு செய்ய அரசு அதிகாரிகளுக்கு பரிந்துரை ெசய்யப்பட்டுள்ளது. இதனால், வனத்துறை, வேளாண்மைத்துறை, சுற்றுலாத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினர் முறையாக ஆய்வு செய்ய உள்ளனர். அப்போது, இடையப்பட்டி கோயில்காடு பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் மண்டலமாக மாற வாய்ப்பு உண்டு.

The post பல்வேறு உயிரினங்கள் வாழும் இடையபட்டி கோயில் காடு பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் மண்டலமாகுமா: அமைச்சர்கள் ஆய்வால் பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Hazabatti Temple forest ,Madurai ,Hadabatti Temple forest forest ,Hazabattu Temple ,
× RELATED முதலமைச்சரின் விரிவான மருத்துவக்...