சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்று மேற்கு திசை காற்றும் இணைந்துள்ளதால் தமிழ்நாட்டில் நேற்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. சென்னையில் நேற்று காலை 10 மணிக்கு பிறகு நகரின் சில இடங்களில் பலத்தகாற்றுடன் மழை பெய்தது. புறநகரில் சில இடங்களிலும் மழை பெய்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக குமாரபாளையத்தில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் 3.4 செ.மீ., காட்டுமன்னார்கோவிலில் 2.3 செ.மீ. மழை பெய்தது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 3.9 செ.மீ. மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளையில் கடந்த 24 மணி நேரத்தில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது எனவும் கூறியுள்ளது.
The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.
