×

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று காலை தொடங்கியது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டு திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி ஆகிய நால்வரால் பாடல் பெற்ற ஸ்தலமாக ஆட்சீஸ்வரர் கோயில் திகழ்ந்து வருகிறது. ஆண்டுதோறும் இக்கோயிலின் சித்திரை பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், இந்தாண்டு நேற்று காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள்ளாக ராஜகோபுரம் அருகில் உள்ள கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் மே 5ம் தேதி வரை விழா நடக்கிறது. இதையொட்டி, கோயில் ராஜகோபுரம், உள்பிரகார சன்னதிகள் வண்ண விளக்குகளால் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, மங்கல இசையுடன் ஆட்சீஸ்வரர், இளங்கிளி அம்மன் நந்தி ஆகிய சாமிகளுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

தொடர்ந்து சூரிய பிறை, அதிகார நந்தி, திருமுல்லைப்பால் உற்சவம், 63 நாயன்மார்கள் உற்சவம், அன்னவாகனம், யாழிவாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில், 30ம் தேதி தேர் திருவிழா நடைபெற உள்ளது. மேலும் தொட்டி உற்சவம், தீர்த்தவாரி, அகஸ்தியருக்கு காட்சி கொடுத்தல், விடையாற்றி உற்சவம் நடக்கிறது. மே 4ம் தேதி வரை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

The post அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chitrai Festival Flag Hoisting ,Achirupakkam Adseeswarar Temple ,Madhurantagam ,Chitrai festival ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...