×

பல்லாவரத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் பெண்களை கிண்டல் செய்த சிறுவர்களை அழைத்துச் சென்ற போலீசார்: காவல்நிலையத்தை முற்றுகையிட்டு பாஜக வாக்குவாதம்

பல்லாவரம்: பல்லாவரத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், பெண்களை கிண்டல் செய்த பாஜக சிறுவர்களை போலீசார் காவல்நிலையம் அழைத்து சென்றதால் பரபரப்பு நிலவியது. இதைக்கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் விளையாட்டு திடலில் நேற்று மாலை நடந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு ரூ.3684 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பாஜகவினரும் கலந்துகொண்டனர்.

இரவு நிகழ்ச்சி முடிந்ததும் மதுபோதையில் இருந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக சிறுவர்கள் 3 பேர், கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்களை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கண்டித்ததுடன் அவர்களை மடக்கி பிடித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் அவர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் பல்லாவரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர், போலீசார் பிடித்து வந்திருந்த சிறுவர்களை போலீசார் எப்படி தாக்கலாம் என கூறி, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தாம்பரம் காவல் துணை ஆணையர் அதிவீரபாண்டியன், பாஜகவினரை அமைதியாக கலைந்து செல்லும்படி கூறினார். இதைத்தொடர்ந்து போலீசார் அழைத்து வந்த 3 பேரும் 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் என்பதால், மீண்டும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என அறிவுரை கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இதையடுத்து காவல் நிலையம் முன்பு திரண்டிருந்த பாஜகவினர் அமைதியாக கலைந்து சென்றனர்.

The post பல்லாவரத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் பெண்களை கிண்டல் செய்த சிறுவர்களை அழைத்துச் சென்ற போலீசார்: காவல்நிலையத்தை முற்றுகையிட்டு பாஜக வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Pallavaram ,BJP ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...