கயத்தாறு, மார்ச் 16: அனைத்து மண்டல போக்குவரத்து கழக பேருந்துகளுக்கும் கயத்தாறு சுங்கச்சாவடியில் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் தேசிய நாற்கர சாலைக்காக புறவழிச்சாலை அமைக்கப்பட்ட பின்பு சில குறிப்பிட்ட பேருந்துகள் மட்டுமே கயத்தாறு ஊருக்குள் வந்து சென்றது. அந்த பேருந்துகளும் பகல் நேரங்களில் மட்டும் வருவதோடு இரவு 10 மணிக்கு மேல் ஊருக்குள் வருவதில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் போக்குவரத்து கழகங்களிடம் பெறப்பட்ட தகவலின் படி நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை மண்டலங்களைச் சேர்ந்த கயத்தாறு மார்க்கமாக செல்லும் 237 பேருந்துகளில் 91 பேருந்துகள் கயத்தாறு ஊருக்குள் வர வேண்டியவை.
ஆனால் அவை புறவழிச்சாலை வழியாக செல்வதோடு மட்டுமல்லாமல் அப்பேருந்துகள் கோவில்பட்டி மற்றும் நெல்லைக்கு ஆகும் கட்டணத்தையே வசூலித்து வந்தது. இதுகுறித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டதில் மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2017 ஆகஸ்ட் 16ல் அனுமதிக்கப்பட்ட பேருந்துகள் கயத்தாறு ஊருக்குள் வர போக்குவரத்து கழக வழக்கறிஞர்கள் முன்பாக உத்தரவிட்டது. ஆனால் போக்குவரத்து கழகங்கள் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்த நிலையில் பல்வேறு அமைப்புகள், சங்கங்கள், கட்சிகள் போராடிய நிலையில் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் கயத்தாறு சுங்கச்சாவடியில் புதிய நிறுத்தம் அறிவிப்பது எனவும், கட்டண குறைப்பு செய்வது எனவும் பேசி முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் அதன் பின்பும் திருநெல்வேலி மண்டல பேருந்துகள் மட்டும் நிறுத்தம் செய்வதோடு குறைந்த கட்டணமும் வசூல் செய்து வந்தது. ஆனால் மற்ற அரசு போக்குவரத்து மண்டலங்களை சேர்ந்த அரசு பேருந்துகள் கயத்தாறு சுங்கச்சாவடியில் நிறுத்தம் செய்யாமல், அதிக கட்டணத்தையும் வசூலித்து வருகிறது. இதற்காக போராடிய பல்வேறு அமைப்புகளும், பொதுமக்களும் மிகுந்த வருத்தத்துக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் பாதிக்கப்படுவது சாதாரண பொதுமக்கள் மட்டுமின்றி அருகில் உள்ள பெருநகரங்களான திருநெல்வேலி, கோவில்பட்டி ஆகிய நகரங்களுக்கு கல்வி பயிலச்செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் தொழில் நிமித்தமாக அங்கு செல்லும் வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
சமாதான கூட்டத்தின் போது அனைத்து பேருந்துகளும் நின்று செல்லும் என்று அதிகாரிகள் கூறியதை நம்பி அப்பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் நெல்லை மண்டல பேருந்துகளை தவிர மற்ற மண்டலங்களை சேர்ந்த பேருந்தில் ஏறி பயணிக்கும் போது நடத்துனர்கள் அதிக கட்டணம் கேட்பதுடன் நிறுத்தம் இல்லை என கூறுவதால் பயணிகளுக்கும் பேருந்து நடத்துனர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு அவை காவல் நிலையம் வரை சென்றுள்ளது. ஏற்கனவே சுங்கச்சாவடியில் இறங்கினாலும் ஊருக்குள் வர 150 ரூபாய் ஆட்டோ கட்டணம் கொடுத்து தான் வர வேண்டி உள்ளது. மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகள் ஊருக்குள் குறைவாக வருவதினால் காலையில் நீண்டநேர காத்திருப்புக்கு பின் பள்ளி, கல்லூரி மாணவர்களும், வெளியூரில் பணிபுரியும் ஊழியர்களும் செல்ல வேண்டி உள்ளது.
எனவே, காலதாமதத்தை தவிர்க்க வேறு வழியின்றி பேருந்துகளின் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்கின்றனர். எனவே இப்பிரச்னைக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கயத்தாறு சுங்கச்சாவடியில் அனைத்து மண்டல பேருந்துகளுக்கும் நிறுத்தம் மற்றும் கட்டண குறைப்பு ஏற்படுத்தி தருவதுடன், தினமும் பேருந்துகள் கயத்தாறுக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் இதற்கு நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் சார்பாக அனைத்து கட்சிகள், அமைப்புகள் மற்றும் வியாபாரிகள் சங்கங்கள் ஒன்று திரண்டு ஒரு மாபெரும் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர். எனவே அரசு இந்த பிரச்னையில் உரிய கவனம் செலுத்தி தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என கயத்தாறு சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.