தஞ்சாவூர், டிச. 23: தஞ்சை மாவட்டத்தில் வனத்துறையின் சார்பில் இந்த ஆண்டு இதுவரை 106 குரங்குகள் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது என மாவட்ட வன சரக அலுவலர் ஜோதிகுமார் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டத்திலும், மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாகவே அதிக அளவில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தன. சில நேரங்களில் ஒரே நேரத்தில் 5 அல்ல அல்லது 6 குரங்குகள் கூட்டமாக பொதுமக்கள் வாழும் இடங்களுக்கு வந்து மேற்கூரைகளை சேதப்படுத்துவது, துரத்துவது என மக்களை பல்வேறு இன்னலுக்கு ஆளாக்கி வந்தது.
இதேபோல், தஞ்சை நகர பள்ளி, கல்லூரிகளிலும் குரங்குகள் அவ்வப்போது நுழைந்து மாணவ, மாணவிகளை அச்சுறுத்தியது. இவை யாரும் இல்லாத நேரத்தில் அடிக்கடி வகுப்பறைகளிலும், வீடுகளுக்குள்ளும் புகுந்து பொருட்களையும், தின்பண்டங்கள், உணவுகளை தூக்கி செல்வது தொடர்கதையாக நீடித்தது. மேலும் மாடிகளில் காய வைத்திருக்கும் துணிகளை தூக்கி செல்வது, வீட்டில் உள்ள சிறுவர்களை விரட்டுவது என பல்வேறு சம்பவங்கள் அரங்கேறின. இதனால் தஞ்சை மாநகரத்தின் முக்கிய பகுதிகளான மகர்நோன்புசாவடி, வடக்கு வீதி, புதிய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள், சீனிவாசபுரம், புறநகர் பகுதிகளான நாஞ்சிக்கோட்டை, வல்லம், ரெட்டிபாளையம், அம்மன்பேட்டை மற்றும் தஞ்சை தாலுகாக்களான பூதலூர், பாபநாசம், திருவையாறு போன்ற பகுதிகளில் இருந்தும் பொதுமக்களால் வனத்துறையினருக்கு அதிக அளவில் புகார்கள் வந்தன. இதையடுத்து தஞ்சை சரக வனத்துறையின் சார்பில் சரக பகுதிகளான தஞ்சை, பூதலூர், பாபநாசம், திருவையாறு சுற்று வட்டாரங்களில் உள்ள பல்வேறு இடங்களிலும் குரங்குகளை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. இந்த கூண்டு வைத்து 1 வாரம் முதல் 2 வாரங்களிலேயே அதிக எண்ணிக்கையில் குரங்குகள் பிடிப்பட்டன. இதைதொடர்ந்து பிடிபட்ட குரங்குகளை திருச்சி அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
இது குறித்து தஞ்சை மாவட்ட வன சரக அலுவலர் ஜோதிகுமார் கூறுகையில்:
தற்போது குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பருவகால மாறுதலால் குரங்குகளும் தண்ணீர் மற்றும் உணவுகளை தேடி மக்கள் வாழும் பகுதிகளை நோக்கி படையெடுக்கிறது. இவற்றை கூண்டு வைத்து பிடித்து புதுக்கோட்டை, திருச்சி அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் கொண்டு விடுவதற்கான நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி, நடப்பாண்டில் இதுவரை தஞ்சை சரக பகுதிகளில் சுற்றித்திரிந்த 106 குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து ஆச்சம்பட்டி, கல்லணை அருகே உள்ள வனப்பகுதிகளிலும், திருச்சியை அடுத்த அடர்ந்த வனப்பகுதிகளிலும் விடப்பட்டுள்ளது. இதனிடையே வீட்டிற்கு அருகே வரும் குரங்குகளுக்கு பொது மக்கள் தின்பண்டங்கள், உணவுகளை கொடுப்பதாக தகவல் வந்தது. இதனால் வனத்துறையின் சார்பில் விடுத்துள்ள எச்சரிக்கையில் குரங்குகளுக்கு பொதுமக்கள் உணவுகள் ஏதும் வழங்கினால் 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
