தஞ்சாவூர், டிச. 23: தஞ்சை மாவட்டத்தில் 2.74 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வருகிற 29ந்தேதி தொடங்கி 21 நாட்கள் நடக்கிறது.
இது குறித்துதஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்ததாவது:
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களின் அனைத்து கிராமம், குக்கிராமம் மற்றும் நகர்புறங்களில் உள்ள 2.74 லட்சம் பசு மற்றும் எருமை மாடுகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 8வது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி (கோமாரிநோய்) முகாம் வருகிற 29ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த தடுப்பூசி போடும் பணி அடுத்த மாதம் (ஜனவரி ) 18ந்தேதி வரை 21 நாட்கள் நடைபெறுகிறது.
மேலும் அடுத்த மாதம் 28ந்தேதி விடுபட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. 4 மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து கறவை சினை உள்ளிட்ட பசு, எருமை மற்றும் அனைத்து எருதுகளுக்கும் தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடுவதற்கு முன்பாக அனைத்து கால்நடைகளுக்கும் தனித்துவ 12 இலக்கு எண் கொண்ட காது வில்லை அணிவித்து, கால்நடை தொடர்பான விவரங்களை செயலியில் பதிவேற்றுவது மத்திய அரசாங்கத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் தங்கள் கிராமத்திற்கு வருகை புரியும் போது அனைத்து கால்நடைகளுக்கும் அடையாள காதுவில்லை பொருத்தி 100 சதவீத கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி மேற்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
