கழுகுமலை, ஜூன்4: கழுகுமலை சட்டநாதன் தெருவைச் சேர்ந்த முனீஸ்வரன் மகன் கோமதி சங்கர் (17). இவர் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். நேற்று முன்தினம் இரவு 8மணிக்கு மேல் கழுகுமலையில் இருந்து கோவில்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சங்கரலிங்கபுரத்திலிருந்து சங்கரன்கோவில் நோக்கி வந்த டிப்பர் லாரியை சொக்கநாதன்புத்தூர் மேலதுரைசாமிபுரத்தைச் சேர்ந்த வெங்கடசாமி (48) என்பவர் ஓட்டி வந்தார்.
டிப்பர் லாரி பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது எதிரே வந்த கோமதிசங்கர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கோமதிசங்கரை ஆம்புலன்சில் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கோமதிசங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.
