×

பள்ளி மாணவர்களுக்கு தினமும் உடற்கல்வி வகுப்பு நடத்த வேண்டும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு பிற பாடங்களைப் போன்று உடற்கல்விக்கும் தினமும் வகுப்புகள் நடைபெற துறையின் அமைச்சர் ராஜ்மோகன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தினார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் முன்னெடுப்பில் பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு (சிஎஸ்ஆர்) திட்டத்தின் கீழ் ஹூண்டாய் மொபிஸ் நிறுவனத்தின் மூலமாக சென்னை மாவட்டத்தில் உள்ள 18 அரசுப் பள்ளிகளுக்கு ரூ.70 லட்சம் செலவில் 900 டெஸ்க் பெஞ்ச் வழங்கும் நிகழ்ச்சி எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், பொதுப்பணித் துறை, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்துகொண்டு பள்ளிக்கான டெஸ்க் பெஞ்ச் வழங்கினர். நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: பள்ளிகளில் அறிவியல், கணிதம் போன்ற பாடங்களைப் போன்று உடற்கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

உடற்கல்விக்கு வாரம் இரு பாடவேளைகள் மட்டும் இருப்பது போதாது. பிற பாடங்களைப் போன்று உடற்கல்விக்கும் தினமும் வகுப்புகள் நடைபெற துறையின் அமைச்சர் ராஜ்மோகன், துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழக அரசுப் பள்ளிகளில் 6 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர்.

அவர்களை விளையாட்டு மேம்பாட்டுத் துறையிடம் ஒப்படைக்குமாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். அந்த ஆசிரியர்களுக்கு, மாணவர்களின் எதிர்காலத்துக்கான திட்டங்களை வகுத்துக் கொடுத்து, பள்ளி மாணவர்களை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Minister ,Aadav Arjuna ,Chennai ,Sports Development ,Rajmohan ,Chennai District ,Governor ,Malati Helen ,
× RELATED தமிழகத்தில் குதிரை பேரம் நடக்கிறது...