×

கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்ய தடை நீக்கம் ஏன்? தமிழக அரசு விரிவான அறிக்கை தர ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்வதற்கான தடையை நீக்கியது ஏன் என்பது தொடர்பாக அரசு தரப்பில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.  திருத்தொண்டர்கள் அறக்கட்டளையின் அறங்காவலர் ராதாகிருஷ்ணன் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: கரூர் மாவட்டத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோயில், ரவீஸ்வரர் சுவாமி கோயில், குப்புச்சிபாளையம் விக்ருதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலங்கள் 15 கிராமங்களில் உள்ளன.

இதில் 3,390 தனி நபர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டது. இந்த நிலங்களை பத்திர பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டது. தற்போது தடையை நீக்கம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சி.வி கார்த்திகேயன், சக்திவேல் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி, ‘‘அறநிலையத்துறை ஆணையர், அரசு செயலர், கலெக்டர் மூன்று பேரும் இணைந்து ஒரே நாளில் கோயில் நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளனர். இது சட்டவிரோதம்’’ என்றார். தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி, ‘‘அக்காலத்தில் இனாம் நிலங்கள் கோயில்களுக்கு வழங்கப்பட்டன. 1965, 67ம் ஆண்டுகளில் ரயத்துவாரி பட்டாக்கள் வழங்கப்பட்டு, பலருக்கு மாற்றியும் விற்பனை செய்யப்பட்டது.

இதுதொடர்பாக விசாரித்ததில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக, மனு அளித்த நபர்கள் அங்கு வசிப்பது தெரிய வந்தது. அவர்கள் கோரிக்கையின் அடிப்படையிலேயே, தடை நீக்கப்பட்டது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘பத்திரப்பதிவு தடையை நீக்கம் செய்வதற்கு முன் கோயில் நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்கப்பட்டதா’’ என கேள்வி எழுப்பினர்.

இதற்கு அரசு தரப்பில், ‘‘இந்த விசாரணை குழுவில் கோயில் நிர்வாகத்தினரும் இருந்தனர். அவர்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘மீதம் கொஞ்சமாவது கோயிலுக்கு இடங்கள் இருக்கிறதா’’ என கேள்வி எழுப்பினர்.

அதனை தொடர்ந்து, தற்போது பத்திரப்பதிவிற்கான தடை நீக்கம் செய்யப்பட்ட இடங்கள் யார் வசம் உள்ளது? எதன் அடிப்படையில் நிலங்களுக்கான தடை நீக்கம் செய்யப்பட்டது என்பது குறித்து விரிவான அறிக்கையை வரும் 29ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து ஆக.11ம் தேதி மதியம் 3.30 மணிக்கு விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும்’’ என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Tags : High Court ,Tamil Nadu government ,Madurai ,Radhakrishnan ,Thirutondaral Trust ,Court ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு தினமும்...