சென்னை: குழந்தைகளை பிரசாரத்தில் பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும், தேவைப்பட்டால் விதிகள் வகுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தேர்தலின்போது குழந்தைகளை பிரசாரத்திற்கு பயன்படுத்தியது, பணப்பட்டுவாடா செய்தது போன்ற ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராக, சுதந்திரமான விசாரணை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் எல்.வாசுகி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பணப்பட்டுவாடா தொடர்பான குற்றச்சாட்டுகளை கையாள ஏற்கனவே சட்டப்பிரிவுகள் உள்ளன. அந்த பிரிவுகளின் அடிப்படையில் தேர்தல் வழக்கு தொடரலாம். தேர்தலில் பணப்பட்டுவாடா தடுக்க பறக்கும்படை, கண்காணிப்பு குழு என பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த தேர்தலில் தமிழகத்தில் 599 கோடியே 24 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று ஏற்கனவே அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த வழக்கில் குறிப்பிட்ட எந்த சம்பவத்தையும் சொல்லவில்லை. வாக்காளர்கள் அனைவரும் வயது வந்தவர்கள், சொந்தமாக சிந்தித்து வாக்களிக்கக் கூடியவர்கள். குறிப்பிட்ட எந்த ஒரு கட்சிக்கும் வாக்களிக்குமாறு அவர்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்க முடியாது.
வாக்காளர் மீது செல்வாக்கை செலுத்துவது என்பது ஒரு வகையில் ஊழல் நடவடிக்கைதான். குழந்தைகளை பிரசாரத்தில் பயன்படுத்துவது சரிதானா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. தேவைப்பட்டால் இது சம்பந்தமாக விதிகள் வகுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
