×

திருப்பூர் அருகே அரசு மருத்துவமனையில் தொண்டை சதை வளர்ச்சி ஆபரேஷன் 6ம் வகுப்பு மாணவன் திடீர் உயிரிழப்பு: உடலை வாங்க மறுத்து பெற்றோர் சாலை மறியல்

திருப்பூர்: திருப்பூர், 15.வேலம்பாளையம் அருகே உள்ள நேரு நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த் (44). இவரது மனைவி பூஜா (39). பனியன் தொழிலாளர்களான இந்த தம்பதிக்கு ஹரிஷ் (11) என்ற மகனும், ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். ஹரிஷ் அங்குள்ள அரசுப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். ஹரிஷுக்கு கடந்த சில வாரங்களாக தொடர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதனால், கவலையடைந்த பெற்றோர், அவரை 15.வேலம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு ஹரிஷை பரிசோதித்த மருத்துவர்கள் தொண்டையில் சதை வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு அறுவை சிகிச்சை செய்தால் சரியாகிவிடும் என்றும் கூறியுள்ளனர். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, அறுவை சிகிச்சைக்காக கடந்த 12ம் தேதி அரசு மருத்துவமனையில் ஹரிஷ் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்த போதே, எதிர்பாராத விதமாக ஹரிஷ் உடல் நிலைமை மோசமடைந்தது.

மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக குமார் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி உள்ளனர். பின்னர் அங்கிருந்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவசர அவசரமாக அனுப்பி வைத்தனர். அங்கு ஹரிஷை பரிசோதித்த அவசர பிரிவு மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் அஜாக்கிரதையும், அலட்சியமுமே மகன் உயிரிழக்கக் காரணம் என பெற்றோர்கள் கூறி வந்தனர். இது குறித்து 15.வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் ஹரிஷ் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசியல் கட்சியினர் அரசு மருத்துவமனை முன்பு நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags : Tiruppur ,Prashanth ,Nehru Nagar ,Velampalayam, Tiruppur ,Pooja ,Harish ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு தினமும்...