×

9, 10-ம் வகுப்புகளில் 3-வது மொழி தேர்வில் தேர்ச்சி பெறுவது இனி கட்டாயம் : சிபிஎஸ்இ உத்தரவு

 

புதுடெல்லி:மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் 3-வது மொழிக்கான பள்ளி அளவிலான உள் மதிப்பீட்டுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற வேண்டுமானால், இந்த 3-வது மொழித் தேர்வின் உள் மதிப்பீட்டில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று சிபிஎஸ்இயின் புதிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சிபிஎஸ்இ கடந்த 10ம் தேதி வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி, 2027-28 கல்வியாண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, இந்த 3-வது மொழிக்கு தனியாக வாரிய அளவிலான பொதுத்தேர்வு ஏதும் நடத்தப்படாது.

இந்தத் தேர்வு முழுமையாகப் பள்ளிகளிலேயே உள் மதிப்பீட்டுத் தேர்வாக நடத்தப்படும். இதில் மாணவர்கள் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களைப் பெற வேண்டியது அவசியம்.ஒருவேளை 10-ம் வகுப்பில் ஒரு மாணவர் இந்த உள் மதிப்பீட்டுத் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறினால், 10-ம் வகுப்பு இறுதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே, பள்ளிகள் அந்த மாணவருக்கு மறுதேர்வு நடத்தி தேர்ச்சி பெற வழிவகை செய்ய வேண்டும்.9-ம் வகுப்பு மாணவர்களுக்கான விதிகள் சற்று தளர்த்தப்பட்டுள்ளன. 9-ம் வகுப்பில் 3-வது மொழித் தேர்வில் ஒரு மாணவர் தேர்ச்சி பெறத் தவறினாலும், அவர் 10-ம் வகுப்பிற்குத் தகுதி உயர்த்தப்படுவார்.

இருப்பினும், அவர் 10-ம் வகுப்பில் படிக்கும்போதே, 9-ம் வகுப்பில் நிலுவையில் உள்ள அந்த 3-வது மொழித் தேர்வை எழுதி கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய கல்விக் கொள்கை 2020-இன் படி, மும்மொழிக் கொள்கையை சிபிஎஸ்இ அமல்படுத்துகிறது. மாணவர்கள் படிக்கும் மூன்று மொழிகளில், குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். (உதாரணமாக: தமிழ், இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம் போன்றவை). ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், அரபிக், ஸ்பானிஷ் போன்ற மொழிகள் அன்னிய மொழிகளாகக் கருதப்படும்.ஏற்கனவே 7, 8 மற்றும் 9-ஆம் வகுப்புகளில் ஆங்கிலத்துடன் பிரெஞ்சு அல்லது ஜெர்மன் போன்ற அன்னிய மொழிகளைத் தேர்ந்தெடுத்துப் படித்து வரும் மாணவர்களுக்கு ஒருமுறை மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அந்த மொழிகளைத் தொடரலாம், ஆனால் 3-வது மொழியாக ஏதேனும் ஒரு இந்திய மொழியைக் கூடுதலாகப் படிக்க வேண்டும்.சிபிஎஸ்இ இந்த புதிய விதியை படிப்படியாக அமல்படுத்துகிறது. தற்போதைய கல்வியாண்டில் (2026-27) 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த புதிய விதிமுறை பொருந்தாது. அவர்கள் தற்போதிருக்கும் இருமொழி கொள்கையின் படியே பொதுத்தேர்வு எழுதுவார்கள். 2026-27 கல்வியாண்டில் 9-ம் வகுப்பில் இணையும் மாணவர்களுக்கும், அவர்கள் 2027-28-இல் 10-ம் வகுப்புக்குச் செல்லும்போதுமே இந்த புதிய 3-வது மொழித் தேர்ச்சி விதிமுறை முழுமையாகப் பொருந்தும்.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இதற்கிடையே,மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் பேசிய நீதிபதி ஜாய் மால்யா பாக்சி, இந்தி மற்றும் இதர இந்திய மொழிகளைக் கற்க வேண்டும் என்ற அரசியலமைப்பு இலக்கை முன்னோக்கி எடுத்துச் செல்கிறது. இதன் நோக்கம் மிகவும் தெளிவானது. இந்தியர்கள் ஆங்கிலத்தை ஒரு பூர்வீக இந்திய மொழியாகக் கருத முடியுமா? ஒரு காலத்தில் இந்த நீதிமன்றத்தின் மொழியாகப் பார்சி மொழி இருந்தது, ஆனால் அது எட்டாவது அட்டவணையில் உள்ளதா?” என்று குறிப்பிட்டு, இந்திய மொழிகளைக் கற்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து ஒன்றிய அரசு மற்றும் சிபிஎஸ்இ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி,” இந்த விவகாரம் குறித்துப் பதிலளிக்க இரண்டு வாரம் அவகாசம் வேண்டும் என்று நீதிபதிகள் முன்னிலையில் கோரிக்கை வைத்தார். இருப்பினும், வழக்கின் அவசரத் தன்மையைக் கருத்தில் கொண்ட நீதிபதிகள் சிபிஎஸ்இ வாரியம் தங்களது பதிலை விரைந்து தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 10 நாட்களுக்குப் பிறகு, அதாவது வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

Tags : CBSE ,New Delhi ,Central Board of Secondary Education ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு தினமும்...