* ‘யார் ஆட்சி நடக்கிறது என தெரியாமல் ஆட்டம் போடுகிறீர்கள்’; வீடியோவை வெளியிட்டால் சஸ்பெண்ட் என எச்சரிக்கை
திருப்பூர்: திருப்பூர் அருகே பொது இடத்தில் போதையில் தவெகவினர் கேக் வெட்டி கொண்டாடி ரகளையில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்ய வந்த போலீசாரை தகாத வார்த்தைகளில் பேசி, மிரட்டி தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் பல்வேறு மாவட்டம், மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர். திருப்பூரில் நாளுக்கு நாள் போதை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. புக்கிங் முறையில் கஞ்சா, குட்கா விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் திருமுருகன்பூண்டி போலீஸ் ஸ்டேசனுக்கு அருகில் தனியாருக்கு சொந்தமான உள்விளையாட்டு அரங்கத்தில் ரஞ்சித் (27) என்பவர் நேற்று முன்தினம் இரவு பிறந்த நாள் கொண்டாடினார். இதற்காக அவர் ராக்கியாபாளையம், தேவராயம்பாளையம், அனுப்பர்பாளையம், பெரியாயிபாளையம் போன்ற பல்வேறு பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். அவர்கள் மைதானத்தில் போதையில் கேக் வெட்டி கூச்சலிட்டனர். இந்த பகுதியில் வந்த பெண்களை கேலி, கிண்டல் செய்தனர்.
இது தவிர பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இடையூறு செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் 100க்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்து அனுப்பர்பாளையம் உதவி கமிஷனர் பிரதீப்குமார், இன்ஸ்பெக்டர் அழகுராஜா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போதை கும்பல் போலீசாரை தகாத வார்த்தைகளில் திட்டி தாக்க முயன்றனர். சில இளைஞர்கள் போலீசாரை வீடியோ எடுத்து ‘‘இந்த வீடியோவை வெளியிட்டால் நீங்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவீர்கள்.
யார் ஆட்சி நடைபெறுகிறது என தெரியாமல் ஆட்டம் போடுகிறீர்கள்’’ என ஒருமையில் மிரட்டியுள்ளனர். வீடியோவில் அரசுக்கு ஆதரவாக பேசியதால் அவர்கள் தவெகவினராக இருக்கலாம். அல்லது தவெக ஆதரவாளர்களாக இருக்கலாம் என பொதுமக்கள் கூறினர். இதுதொடர்பாக திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். அங்கு கூடியிருந்த இளைஞர்களில் பலர் மீது கஞ்சா, கொலை மிரட்டல் போன்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
* அரசு பஸ் டிரைவரை அரிவாளால் வெட்டிய தவெக பிரமுகர்
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேட்டையைச் சேர்ந்தவர் பிரசாத் (48). சோழவந்தான் அரசு போக்குவரத்து கழக பணிமனை டிரைவர். கடந்த மே 31ம் தேதி இரவு பணி முடிந்து பஸ்சில் பணிமனைக்கு திரும்பும் வழியில், கருப்பட்டியைச் சேர்ந்த தவெக பிரமுகர் தனுஷ் (எ) தனுஷ்கோடி (45) உள்ளிட்டோர், ஒரு காரை சாலையின் நடுவே நிறுத்தி இருந்தனர். டிரைவர் பிரசாத் விலகிச் செல்லுமாறு கூறியபோது பேருந்துக்குள் நுழைந்து பிரசாத் மீது தனுஷ் உள்ளிட்டோர் அரிவாளால் வெட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.
படுகாயமடைந்த டிரைவர் பிரசாத், தற்போது வரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக சோழவந்தான் போலீசார் வழக்கு பதிந்து, 12 நாளாக தலைமறைவாக இருந்த தனுஷ் (எ) தனுஷ்கோடியை நேற்று கைது செய்தனர். கைதான தனுஷ்கோடி மீது ஏற்கனவே 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
