×

தவெகவின் ஒரு மாத ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: பாஜ மூத்த தலைவர் தமிழிசை தாக்கு

சென்னை: தவெகவின் ஒரு மாத ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தமிழக பாஜ மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்தார். தமிழக பாஜ மூத்த தலைவர் தமிழிசை நேற்று விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ரூ.7,500 ஆயிரம் கோடியை பிரதமர் ஒதுக்கி உள்ளார்.

கூவம் உள்ளிட்ட நதிகளை சுத்தம் செய்ய, ஒன்றிய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. பக்கிங்காம் கால்வாய் சுத்தம் செய்ய நிதி ஒதுக்கியது மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்கள், அரசு மருத்துவமனை வேலை நேரத்தில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க கூடாது என்ற தமிழக மருத்துவ துறை அமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன். கடந்த காலங்களில் மருத்துவர்கள் குறைவாக இருந்தார்கள்.

அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைக்கு சென்று சேவை செய்தார்கள். ஆனால், இப்போது மருத்துவர்கள் அதிகமாக இருக்கின்றனர். எனவே அரசு மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. தவெகவின் ஒரு மாத ஆட்சியில், சட்டம் – ஒழுங்கை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். கஞ்சா, போதை பழக்கத்தை அதிகம் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளன.

தற்போது சிங்கப்பெண் அதிரடிப்படை அமைக்கப்பட உள்ளது. எனவே, குற்றங்களை, இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். ஊழலை கட்டுப்படுத்த வேண்டும். சிஎம்டிஏவில், 15 நாளில் 300க்கும் மேற்பட்ட அனுமதிகள் தரப்பட்டு உள்ளன. மின்சார துறை முறைகேடு ஒரு வாரம் கழித்து தான் சிபிசிஐடியிடம் ஒப்படைத்து உள்ளார்கள்.

இதில் உள் நோக்கம் இருக்கிறதா? யாரையாவது காப்பாற்ற முயற்சி நடந்ததா என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். இந்த புதிய ஆட்சி, இன்னும் அதிக கவனத்துடன் ஆட்சி செய்ய வேண்டும். அனைத்துக்கும் போன ஆட்சி மீது குறை சொல்லாமல், நடக்கும் தவறுகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி செயல்பட வேண்டும்.

 

Tags : TDP ,BJP ,Tamilisai Thakku ,Chennai ,Tamil Nadu ,Tamilisai ,Delhi ,
× RELATED பொது இடத்தில் பிறந்த நாள் கேக் வெட்டி...