×

மாநிலங்களவை தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அரசியல் கட்சிகள் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதுதவிர 12 சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடந்தது.

அப்போது காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி மனு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும், வேட்புமனுவை திரும்ப பெற ஜூன் 11ம் தேதி (நேற்று) மாலை 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று மாலை வரை பிரவீன் சக்கரவர்த்தி தனது வேட்புமனுவை வாபஸ் பெறாத காரணத்தால், மாலை 3 மணிக்கு அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக வெற்றிபெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தேன்மொழி அறிவித்தார்.

அவர் 2028 ஜூன் 29ம் தேதி வரை (இரண்டு ஆண்டுகள்) மாநிலங்களவை எம்பியாக பதவி வகிப்பார். இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரி தேன்மொழி கூறியதாவது: இந்த இடைத்தேர்தல் காலி இடத்தின் எண்ணிக்கை ஒன்று, சட்டப்படி செல்லத்தக்க ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனு ஒன்று என சமமாக உள்ளதால், காங்கிரஸ் கட்சியை சார்ந்த பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்று தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றார். இதுகுறித்து பிரவீன் சக்கரவர்த்தி கூறியதாவது:

தமிழ்நாட்டின் குரலாகவும், தமிழ் மக்களின் குரலாகவும் நான் ராஜ்யசபாவில் குரல் கொடுப்பேன். மோடி அரசு மாநிலங்களின் உரிமைக்கு எதிராக மசோதாக்களை எடுத்து வர திட்டமிட்டுள்ளது. தொகுதி மாற்றம் மற்றும் ஒரேநாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட மசோதாக்களால் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படும். இதற்கு எதிர்ப்பாக தமிழ்நாட்டின் குரல் ஓங்க வேண்டும். தமிழ்நாட்டின் குரல் டெல்லியிலும், பாராளுமன்றத்திலும் நிச்சயம் எழுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Congress ,Rajya Sabha ,Election Commission ,Chennai ,Praveen Chakravarthy ,Tamil Nadu ,
× RELATED பொது இடத்தில் பிறந்த நாள் கேக் வெட்டி...