சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு ஆகஸ்ட் மாதத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற உள்ளதாக தேர்தலில் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற 17வது சட்டப்பேரவை தேர்தலில் த.வெ.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனினும், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்காததால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சி அமைத்தது. தொடர்ந்து, விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.
திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அ.தி.மு.க.வை சேர்ந்த எஸ்.ஜெயகுமார், மரகதம் குமரவேல், பி.சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர்.
இதன் காரணமாக திருச்சி கிழக்கு, பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளுக்கு வரும் ஆகஸ்ட் மாதத்தில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் ஆட்சியர் தலைமையில் தீவிரமாக நடந்து வருகிறது.
