×

அரசு துறை ஒப்பந்தங்களில் முறைகேடு லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசு துறைகளில் நடந்த பல கோடி ரூபாய் ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வீரப்பன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரசின் உட்கட்டமைப்பு ஒப்பந்தங்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற்ற போது பல்வேறு துறைகளில் போலியான ஆவணங்கள் மூலம் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒப்பந்தங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதும் அதனால் அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு முதல் சென்னை சிஐடி நகர் மற்றும் முகப்பேர் வீட்டுவசதி வாரியத்தின் கட்டுமான பணிகள், சென்னை எண்ணூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரத்தை தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட அரசின் பல்வேறு துறைகளின் உட்கட்டமைப்புகான ஒப்பந்தகளை சீ ராக் இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் மற்றும் ஸ்ரீ பதி அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்கள் போலியான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி ஒப்பந்தகளை பெற்றுள்ளன.

இந்த இரு நிறுவனங்களும் அரசு ஒப்பந்தங்களில் யாரும் பங்கேற்காத வகையில் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளன. டெண்டர் தகுதியைப் பெறுவதற்காகச் சமர்ப்பித்த துணை ஒப்பந்ததாரர் அனுபவச் சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை. இது தொடர்பாக கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் நீர்வளத்துறை, மற்றும் பொதுப்பணித்துறைக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, மனுதாரர் அளித்த புகார் மனு விசாரணை நடத்த தமிழக அரசின் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் கடந்த மே 26ம் தேதி ஒரு குழுவை அமைத்துள்ளார். அந்த குழு ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது என்றார்.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அமைத்த குழு 8 வாரத்தில் விசாரணை நடத்தி, அது தொடர்பான விவரங்களை லஞ்ச ஒழிப்பு துறையிடம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி லஞ்ச ஒழிப்பு துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Tags : Anti-Corruption Department ,Chennai ,Madras High Court ,Veerappan ,Villupuram ,Court… ,
× RELATED பொது இடத்தில் பிறந்த நாள் கேக் வெட்டி...