சென்னை: டெல்டா மாவட்டங்களில் கருகும் நிலையில் நெற்பயிர்கள் உள்ளன. எனவே விவசாயிகளின் வயிற்றில் அடித்து விடாதீர்கள் என்று தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவு: சாதாரண பொதுமக்கள் முதல் முக்கிய தொழில்கள் வரை அனைத்து தரப்பு மக்களையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் தொடர் மின்வெட்டு பிரச்னையை, முதல்வர் விஜய் இனியும் அலட்சியமாக கையாளக் கூடாது.
“உபகரணங்கள் திருடு போய் விட்டன, ஊரறிய புகார் கொடுத்துள்ளோம் என்ற உப்புசப்பில்லாத காரணங்களை கூறி கடமையை தட்டிக் கழிக்காமல், தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் அரசு முடுக்கிவிட வேண்டும்.
மேட்டூர் அணையில் இருந்து இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும். அதுவரை மோட்டார் பம்ப் செட்கள் மூலம் பாசனம் செய்யும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் மானியம் வழங்க முன்வர வேண்டும். தவெக அரசு விவசாயிகளின் வயிற்றில் அடித்து விடக் கூடாது என்பதை முதல்வருக்கு கோரிக்கையாகவே முன்வைக்கிறேன்.
