×

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு

நாமக்கல், ஏப்.16: நாமக்கல் மாவட்டத்தில், சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் 8,544 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நேற்று 6 மையங்களில் 2ம் கட்ட பயிற்சி நடைபெற்றது. கலெக்டர் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். தமிழகத்தில், சட்டமன்ற பொதுத்தேர்தல் 23ம் தேதி நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில், தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 6 சட்டமன்றத் தொகுதிகளிலும், மொத்தம் 1,781 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு அன்று ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், ஒரு தலைமை தேர்தல் அலுவலர் உள்பட 4 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். மொத்தம் 6 தொகுதியிலும் 8,544 பேர் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி கடந்த 28ம் தேதி நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று 2ம் கட்ட பயிற்சி முகாம் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு மாவட்டத்தில் 6 இடங்களில் நடைபெற்றது. நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராசிபுரம் எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேந்தமங்கலம் தேவதாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பரமத்திவேலூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி, குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் லட்சுமியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என 6 இடங்களில் அந்ததந்த தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

கலெக்டர் துர்காமூர்த்தி நாமக்கல், சேந்தமங்கலம் மற்றும் ராசிபுரத்தில் நடைபெற்ற பயிற்சி முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசுகையில், `தேர்தல் சிறப்பாகவும், அமைதியாகவும் நடைபெறவும், பொதுமக்கள் சிரமமின்றி வாக்களிக்க தேவையான பணிகளை அலுவலர்கள் மேற்கொள்ளவேண்டும். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் பணியில் அனைவரும் ஈடுபட வேண்டும்,’ என்றார். மேலும், பயிற்சியில் கலந்து கொண்ட அலுவலர்கள் தபால் வாக்கு செலுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த மையத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Namakkal ,Namakkal district ,Tamil Nadu ,Assembly General Election ,
× RELATED வெற்றிலை விலை உயர்வு