×

கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

சேந்தமங்கலம், ஏப்.13: விடுமுறை நாளான நேற்று குடும்பத்துடன் கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள், அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நடப்பாண்டு கோடை தொடங்கியது முதலே கொல்லிமலையிலும் கோடை வெயில் அதிகரித்துள்ளது. இரவில் லேசான குளிர் நிலவி வருகிறது. அதிகாலை சில்லென்று குளிர் காற்று வீசி வருகிறது. மதியத்தில் வெயில் அதிக அளவில் உள்ளது. சமவெளி பகுதிகளில் தற்போது கோடை வெயிலில் தாக்கம் அதிகரித்துள்ளதால் விடுமுறை தினமான நேற்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். சென்னை, புதுச்சேரி, ஐதராபாத், பெங்களூரு, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஐடி, நிதி நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள் டூவீலரில் வந்திருந்தனர்.

அங்கு குறைவாக தண்ணீர் கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்அருவி, சினி பால்ஸ், சந்தனப்பாறை அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். அங்குள்ள பிரசித்தி பெற்ற அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தாவரவியல் பூங்கா, சிக்குப்பாறை காட்சிமுனையம் இயற்கை அழகை சுற்றி பார்த்துவிட்டு, வாசலூர்பட்டி ஏரியில் குடும்பத்துடன் குழந்தைகளுடன் படகு சவாரி செய்தனர். மாலை வீடு திரும்பும்போது சோளக்காடு, தெம்பளம், திண்டு ஆகிய பகுதிகளில் உள்ள பழச்சந்தையில் அன்னாசி, பலா, மலை வாழை, கொய்யா, கமலா ஆரஞ்சு, தேன், மிளகு உள்ளிட்ட கொல்லிமலையில் விளையும் பொருட்களை ஆர்வமாக வாங்கிச் சென்றனர்.

Tags : Kolli Hills ,Senthamangalam ,Namakkal district ,Tamil Nadu ,Andhra Pradesh ,Kerala ,Karnataka ,Puducherry… ,
× RELATED வெற்றிலை விலை உயர்வு