×

மூத்த குடிமக்களின் தபால் வாக்கு பதிவு செய்யும் பணி துவங்கியது

நாமக்கல், ஏப்.13: நாமக்கல் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று தபால் வாக்குப்பதிவு செய்யும் பணி துவங்கியது. இப்பணியை 2 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (எஸ்டி), நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. வரும் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, 6 தொகுதிகளில் 85 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் 5,249 பேர், மாற்றுத்திறனாளிகள் 3,910 பேர் என மொத்தம் 9,159 பேர் வீட்டிலேயே இருந்து வாக்களிக்க விருப்பம் தெரிவித்து படிவம் 12டி அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து, தகுதியுள்ள வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு, 6 தொகுதிகளிலும் வாக்குச்சாவடி அலுவலர்கள், நேற்று வாக்காளர்களின் வீட்டிற்கு நேரில் சென்று தபால் வாக்கு மூலம் வாக்களிக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வீட்டில் இருந்தபடி, தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்தனர். இதற்காக வாக்குசாவடி அலுவலர்கள் தலைமையில், தேர்தல் பணி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, அவர்களின் வாக்குகளை பதிவு செய்தனர். நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, தபால் வாக்குப்பதிவு செய்யும் பணி நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். பொதுத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில், நேற்று மாவட்டத்தில் துவங்கி தபால் வாக்குப்பதிவு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தேர்தல் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இன்று (13ம் தேதி), நாளை (14ம் தேதி)யும் தொடர்ந்து தபால் வாக்குப்பதிவு செய்யும் பணி தொடர்ந்து நடைபெறும். மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9,159 மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று, அவர்களின் தபால் வாக்குகள் பெறப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 13 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கான பூத் சிலிப் வினியோகம் செய்யும் பணி நேற்று துவங்கியது. வாக்குச்சாவடி அலுவலர்கள், பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பூத் சிலிப்பை வழங்கினர். இந்த பணியை 2 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tags : Namakkal ,Namakkal district ,Rasipuram ,Special ,Senthamangalam ,ST ,Paramathivellur ,Thiruchengode ,
× RELATED வெற்றிலை விலை உயர்வு