×

காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் விருத்தாசலத்தில் பசுமாட்டு சாணம், இயற்கை கழிவுகளை கொண்டு இயற்கை முறையில் எரிவாயு தயாரித்த இளைஞர்

விருத்தாசலம், மார்ச் 12: விருத்தாசலம் அண்ணாநகரை சேர்ந்தவர் பாரதி ரங்கன் மகன் ஹரிஹரன் (30). ஐடிஐ பிட்டர் படிப்பு படித்து விட்டு தனியார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது பொது அறிவு மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை அறிந்து கொள்ள ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் தற்போது அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஹரிகரன், காஸ் சிலிண்டர் இல்லாமல் இயற்கை எரிவாயு மூலம் சமைப்பது எப்படி என யோசித்து, இயற்கை முறையில் பசு மாட்டு சாணம், வீட்டில் உபயோகப்படுத்தப்படும் காய்கறிகள், பழங்கள், பழைய சாதம், சாதம் வடித்த தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை ஒரு சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியில் கலந்து தேக்க வைத்து அதிலிருந்து உற்பத்தியாகும் எரிவாயு மூலம் கடந்த சில தினங்களாக சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, இதற்கு சாண எரிவாயு என பெயர், மாட்டு சாணம், கஞ்சி தண்ணீர், பால், தயிர், மோர், காய்கறி கழிவுகள், மீன் கழிவுகள் ஆகியவற்றை பயன்படுத்தி இந்த பயோ காஸ் தயாரிக்கலாம். இதில் எலுமிச்சம் பழம், தக்காளி, புளி, பூண்டு, முருங்கை, வெங்காயம், இஞ்சி ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது, காஸ் சிலிண்டரை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையான முறையில் தயாரிக்கும் இந்த எரிவாயுவை பயன்படுத்தி சமைத்தால் உடலுக்கும் கேடு இல்லை, செலவும் மிச்சப்படும், காஸ் சிலிண்டருக்காக காத்திருக்க தேவையில்லை, எந்தவித உயிர் பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளார். இந்த முறையானது பழங்காலத்தில் கிராமப்புறங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்த முறையாக இருந்தாலும் தற்போது காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் நகரத்தில் வாழும் இளைஞர் இந்த செயலில் ஆர்வம் காட்டி கண்டுபிடித்திருப்பது விருத்தாசலம் பகுதியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Virudhachalam ,Hariharan ,Bharathi Rangan ,Annanagar, Virudhachalam ,
× RELATED வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய 14 விதிகள்