- காங்கிரஸ்
- மார்க்சிஸ்ட்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- கேரளா
- ஜி. சுதாகரன்
- வெ.
- அச்சுதானந்தன்
- சட்டப்பேரவை
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவர் ஜி.சுதாகரன். முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு மிகவும் நெருக்கமான இவர், 7 முறை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு 4 முறை வெற்றி பெற்றார். இதில் இரண்டு முறை அமைச்சராக இருந்தார். 1970ல் இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்எப்ஐ) தொடங்கப்பட்ட போது சுதாகரன் தான் முதல் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.
சிபிஎம் மாநிலக் கமிட்டி உறுப்பினராக இருந்த இவருக்கு 75 வயது ஆனதைத் தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு இந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு கிளை கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இது சுதாகரனுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன்பிறகு சுதாகரன் கட்சிக்கு எதிராக வெளிப்படையாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார். இந்நிலையில் வரும் தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று கருதினார்.
ஆனால் சுதாகரனுக்கு சீட் கொடுக்கக் கூடாது என்று ஆலப்புழா மாவட்டக் கமிட்டி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மாநிலக் கமிட்டியும் இதற்கு ஒப்புதல் அளித்தது. கடந்த சில தினங்களுக்கு முன் சுதாகரனுக்கு வரும் தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படுமா என்று சிபிஎம் மாநில செயலாளர் கோவிந்தனிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு சுதாகரனுக்கு சீட் கிடையாது என்று அவரை கிண்டல் செய்யும் வகையில் கோவிந்தன் பதிலளித்தார்.
இதனால் கோபமடைந்த சுதாகரன், ‘அவமானத்தை தாங்கிக்கொண்டு கட்சியில் தொடர வேண்டிய அவசியம் இல்லை. எனவே கட்சி உறுப்பினர் பதவியை நான் புதுப்பிக்க போவதில்லை’ என்று முகநூலில் குறிப்பிட்டார். தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் சுதாகரனின் இந்த அதிரடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. வரும் தேர்தலில் சுதாகரன் சுயேட்சையாக போட்டியிடப் போவதாகவும் தகவல்கள் பரவின. ஏற்கனவே சுதாகரனின் சொந்த மாவட்டமான ஆலப்புழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் கோஷ்டிப் பூசல்கள் அதிகமாக உள்ளன.
இந்த சூழ்நிலையில் சுதாகரன் சுயேட்சையாக போட்டியிட்டால் அது கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் அவரை சமாதானப்படுத்துவதற்காக சிபிஎம் தலைவர்கள் சுதாகரனின் வீட்டுக்கு படையெடுத்து வருகின்றனர். இதற்கிடையே சுதாகரனை தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் அவருக்கு வலைவீசத் தொடங்கியுள்ளது. சிபிஎம்மை விட்டு வெளியேறினால் சுதாகரனை ஆலப்புழா மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நிறுத்துவது குறித்து காங்கிரஸ் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
