×

பாலுக்கும் காவல்… பூனைக்கும் தோழன்; சசிகலாவுடன் பாஜ தரப்பு சீக்ரெட் டீலிங்: ஆஃபர்களை அள்ளி தரும் அமித்ஷா

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சசிகலா, டிடிவி.தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் என பலரும் தனித்தனியாக செயல்பட்டு வந்தனர். இவர்கள் அனைவரும் எடப்பாடி எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளியில் இணைந்திருந்தனர். வரும் சட்டமன்ற தேர்தலில் இணைந்து செயல்படுவது குறித்து கடந்த அக். 30ல் சசிகலா, டிடிவி.தினகரன் மற்றும் ஓபிஎஸ்சை தேவர் ஜெயந்தியின்போது சந்தித்து பேசினார் செங்கோட்டையன். ஆனால், இந்த பேச்சுவார்த்தை முடிந்த சில வாரங்களில் தடாலடியாய் முடிவெடுத்த செங்கோட்டையன், தவெகவில் போய் சேர்ந்தார்.

இதன்பிறகு சில மாதங்களில் பாஜவின் அழுத்தத்திற்கு ஆளான டிடிவி.தினகரன், யாருக்கு எதிராக கட்சியை தொடங்கினாரோ, கிடைக்கும் மேடையில் எல்லாம் கேவலமாக பேசி வந்தாரோ, அதே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் போய் சேர்ந்தார். இதைத் தொடர்ந்து ஓபிஎஸ்சும் அதிரடியாய் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து திமுகவில் இணைந்தார்.

இதனால், தான் மட்டும் தனித்து விடப்பட்டதாக எண்ணிய சசிகலா, தனது ஆதரவாளர்களை திரட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பொதுக்கூட்டத்தை நடத்தி தனது கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தினார். விரைவில் கட்சியின் பெயரை அறிவிக்கப்போவதாகவும் கூறினார். மறுநாள் மதுரையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இனிமேல் தான் எனக்கு பிரச்னையே வரும் என ஆதரவாளர்களிடம் கூறியிருந்தார்.

ஜெயலலிதான் பிறந்த நாளான பிப். 24ல் கட்சியின் கொடியை அறிமுகம் செய்துவைத்த சசிகலா, தற்போது 10 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் சசிகலா முன்பே கூறியதைப் போல அவருக்கு பிரச்னை வந்துவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதிமுக தரப்பில் இருந்து மற்றொரு அரசியல் கட்சி துவங்கினால், தேர்தலின்போது பாதிப்பை ஏற்படுத்தும். தேவையில்லாத சிரமங்களை உருவாக்கும் என எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அமித்ஷா தரப்பு சசிகலாவை தொடர்பு கொண்டு பேசி வருகிறது. சில நேரங்களில் அன்பாகவும், சில நேரங்களில் மிரட்டும் தொனியிலும் பேச்சுவார்த்தை போய் கொண்டிருக்கிறதாம். இதற்கு சசிகலா இதுவரை உறுதியான பதில் சொல்லாத நிலையில், அமித்ஷா தரப்பு அடுத்த தடாலடி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறதாம். இதற்கு சசிகலா தரப்பில் பாஜவை நம்பி எப்படி எந்த முடிவிற்கும் வரமுடியும்? ஏற்கனவே நான் சிறையை பார்த்துவிட்டேன், இனி ஒன்றும் புதிதாக நடக்கப் போவதில்லை.

இப்போதைக்கு என்னால் உடன்பட முடியாது என கறாராக கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து பாஜ தரப்பு சில ஆஃபர்களை சசிகலாவிற்கு கொடுத்ததாம். அதில், ஏற்கனவே ஓபிஎஸ் இருந்ததைப்போல ஒருங்கிணைப்பாளர் பதவி அல்லது அதற்கு இணையான பதவியை பெற்றுத் தருவதாகவும், கட்சியின் சார்பில் தேர்தல் பி படிவத்தில் கையெழுத்திடுவதைப் போன்ற அதிகாரத்தை பெற்றுத் தருவதாகவும், அங்கீகாரமான பதவியுடன் தங்கள் தரப்பிற்கு 10 சீட் வரை கூட்டணியில் கிடைக்கும் என கூறியுள்ளனர்.

பாஜ தரப்பின் இதுபோன்ற நிபந்தனைகளை சசிகலா ஏற்கவில்லையாம். இதனால், இப்ேபாதைக்கு என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள சசிகலா, டிடிவி.தினகரனைப் போல கூட்டணியாகி விடலாமா அல்லது தனித்து களமாடலாமா, இல்லை தேர்தல் வேட்பு மனுவிற்கான கால அவகாசம் வரை அமைதி காக்கலாமா? எப்படி பாஜ தரப்பை சமாளிப்பது என்பதெல்லாம் குறித்து தீவிர ஆலோசனையில் இருக்கிறாராம் சசிகலா.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பா அல்லது எடப்பாடிக்கு எதிராக அரசியல் செய்வதா என்பதில் அவர் எடுக்கும் முடிவை பொறுத்தே கட்சி பெயர் அறிவிப்பு இருக்கும் என்கின்றனர் சசிகலா தரப்பினர். மேலும், எடப்பாடியை தீவிரமாக எதிர்த்து வந்த டிடிவியை முதலில் கூட்டணியில் இணைத்த பாஜ, தற்போது சசிகலா தரப்பை இழுப்பதன் மூலம் தாங்கள், பாலுக்கும் காவல்… பூனைக்கும் ேதாழன் என்பது போல ரகசிய டீலிங் செய்து வருகிறது என்று கூட்டணியில் இருக்கும் சில சீனியர் அதிமுக நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.

Tags : Sasikala ,Amitsha ,Sadapadi Palanisami ,DTV ,Dinakaran ,OPS ,Sengkottaian ,Weidapadi ,
× RELATED சொல்லிட்டாங்க…