×

கூட்டணி இழுபறி, சின்னம் கேள்விக்குறி? திக்கு முக்காடும் பாமக நிறுவனர் ராமதாஸ்: இன்றைய செய்தியாளர் சந்திப்பு ரத்து

 

பாமகவில் ராமதாஸ், அன்புமணி இருவரும் தனித்தனி அணியாக சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க தயாராகி விட்டனர். அன்புமணி தேஜ கூட்டணியில் இணைந்து ராஜ்யசபா சீட் பெற்றுவிட்ட நிலையில் அக்கட்சிக்கான தொகுதிகளை அதிமுக இன்று முடிவு செய்து அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது. ஆனால் ராமதாஸ் தரப்பிலோ இதுவரை கூட்டணி உறுதியாகாமல் இருப்பதால் நிர்வாகிகள், தொண்டர்கள் சோர்வடைந்து உள்ளனர். நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், கூட்டணி இன்னும் முடிவாகல… இன்னும் 3 நாளில் தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

நமக்கான வாகனம் இதோ வந்து விட்டதாக பிப்ரவரி இறுதியில் ராமதாஸ் கூறியிருந்த நிலையில், அவரது கூட்டணி அறிவிப்பு தொடர்பான இழுபறி பல்வேறு விமர்சனங்களை தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுப்பி வருகின்றன. மேலும் மற்ற கட்சிகளுக்குத்தான் அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது… நமக்கான நல்ல செய்தி எதுவும் இதுவரை வரவில்லையே… என்ற ராமதாஸ் ஆதரவு தொண்டர்களின் முணுமுணுப்பை ஆங்காங்கே கேட்க முடிகிறது. இந்த நிலையில் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் வழக்கமான செய்தியாளர் (வியாழன்) இன்றைய சந்திப்பை ராமதாஸ் ரத்து செய்துள்ளார்.

கூட்டணி முடிவாகாத விரக்தி ஒருபுறமுமிருக்க. அடுத்தவாரம் உரிமையியல் நீதிமன்றத்தில் கட்சி உரிமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதிலாவது தனக்கு சாதகமான முடிவு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் ராமதாஸ் காத்திருக்கிறாராம். ஆனால் மூத்த நிர்வாகிகளோ, காலம் கடந்தபின் பயனில்லை… தொண்டர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கூட்டணியை முதலில் அறிவியுங்கள்… மற்றதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்… என நெருக்கடி கொடுத்து வருவதால் ராமதாஸ் கடும் அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாகவே இன்றைய செய்தியாளர் சந்திப்பையும் அவர் தவிர்த்து விட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : PMK ,Ramadoss ,Anbumani ,Anbumani Teja ,Rajya Sabha ,AIADMK ,
× RELATED ஜனநாயகத்தைக் காத்திடும் குரலாய்...