×

சென்னை தரமணியில் ரூ.39.33 கோடியில் கட்டப்பட்டுள்ள 3 படப்பிடிப்பு தளங்கள் கொண்ட திரைப்பட படைப்பாக்க வளாகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் சென்னை, தரமணி, தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன வளாகத்தில் 39 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மூன்று படப்பிடிப்புத் தளங்கள் கொண்ட திரைப்பட படைப்பாக்க வளாகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை:

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், திரைப்பட தயாரிப்பு, தொழில்நுட்ப கல்வி நுணுக்கங்களையும், கலை உணர்வுகளையும் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் முன்னோடி நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் முக்கியக் குறிக்கோள் பல்வேறு விதமான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பதற்கு தேவையான தொழில்நுட்பங்களையும் பிற திரைப்படத் துணைப் பாடங்களையும் மாணவர்களுக்கு கற்றுத்தருவதாகும்.

இந்நிறுவனம் அமைந்துள்ள சென்னை தரமணி, மிகுந்த அளவில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்களும், மிகப்பெரிய அளவிலான தகவல் தொழில்நுட்ப பூங்கா போன்றவைகள் அமைந்துள்ள ஒரு மையப் பகுதியாகும். இதனால், தரமணி தகவல் தொழில்நுட்பம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் குடியிருப்பு வசதிகள் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வளர்ந்து வரும் நகர்ப்புற பகுதியாக திகழ்கிறது. இத்தகைய மையப்பகுதியில் திரைப்படப் பயிற்சி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.

தரமணியில் படப்பிடிப்பு தளங்கள் அமைக்கும்பட்சத்தில் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது படப்பிடிப்புகளுக்காக வெளிமாநிலங்களுக்கு செல்லும் சிரமத்தை தவிர்க்கவும், ஒரே வளாகத்தினுள் பலதரப்பட்ட படப்பிடிப்புகளை மேற்கொள்ளவும், வேலைவாய்ப்பினை அதிகரித்திடும் நோக்கிலும், திரைப்படப் பயிற்சி நிறுவன மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2023-24ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் அறிவிப்பின்படி, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் திரைப்பட படைப்பாக்க வளாகம் எனும் பெயரில் மூன்று அதிநவீன படப்பிடிப்பு தளங்கள் 39.33 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு, முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த அதிநவீன திரைப்பட படைப்பாக்க வளாகத்தில் படப்பிடிப்பு தளங்கள் மூலம் திரைப்படத் துறையினருக்கு மட்டுமல்லாது சின்னத்திரை தொடர்கள் தயாரிப்பு நிறுவனங்கள், டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் நிகழ்வு மேலாண்மை துறைகளுக்கும் மிகுந்த பயன் ஏற்படும்.

Tags : Chennai ,Chief Minister ,M.K. Stalin ,Taramani, Chennai ,Public Relations Department ,Tamil Nadu Government MGR Film and Television Training Institute ,
× RELATED கரூரில் 41 பேர் பலியான விவகாரம்: நடிகர்...