- ராயபெட்
- டிடீவி
- முதல் அமைச்சர்
- ஜெயலலிதா
- பொது செயலாளர்
- எம்.ஜி.ஆர்
- ஜெயலலிதா
- மதுரை கே
- தின மலர்
- என்டிஏ கூட்டணி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை கேகே நகரில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: என்டிஏ கூட்டணியில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9 சதவீதம் ஓர் அணியில் திரண்டுள்ளோம். யாரோ ஒரு சில பேர் ஒதுங்கி இருப்பவர்கள், விலகி இருப்பவர்கள் (ஓபிஎஸ், சசிகலா), சீப்பை ஒளித்து வைப்பதால் கல்யாணத்தை நிறுத்தி விட முடியாது என்பதை உணர்ந்து என்டிஏ கூட்டணிக்கு உறுதியாக வருவார்கள். கூட்டணியில் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம். அமமுக மற்றும் அதிமுக கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை உள்ள தொண்டர்கள் ஜெயலலிதாவின் ஆட்சி அமைய வேண்டும் என முழு மனதோடு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார்கள்.
பொதுவாக கூட்டணியில் சென்சிட்டிவான விஷயம் தொகுதி உடன்பாடு. எந்தெந்த தொகுதி என்பதுதான். அதை சுமூகமாக முடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் அதிமுக தலைமை தாங்கியுள்ள கூட்டணியில், அமமுகவிற்கு பாஜ மூலம் எங்கள் தொகுதிகளை பெறுவோம். தேர்தலில் நான் போட்டியிடவில்லை என அறிவித்தேன். எந்த ஒரு சின்ன மனவருத்தமும் வந்து விடக்கூடாது என்பதற்குதான் தேர்தலில் போட்டியிடவில்லை. அதுபோல, அமமுகவிற்கு தகுதியான வேட்பாளர்களை கவுரவமான முறையில் பெறுவதற்கு பாஜ மூலம் நாங்கள் அந்த உடன்படிக்கையை எட்டுவோம். பாஜ வழிகாட்டலின்படி அமமுக செயல்பட்டு, அதிமுக கூட்டணியில் இடங்களைப் பெற்று போட்டியிடுவோம். இவ்வாறு கூறினார்.
* திடீர் இடலி, திடீர் சாம்பார் சசிகலாவிற்கு 0.1% ஓட்டுதான்: புதிய கட்சி குறித்து நக்கல்
நாங்குநேரியில் நிருபர்களை சந்தித்த டிடிவி.தினகரனிடம், சசிகலா புது கட்சி தொடங்கியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘எங்கள் தோட்டத்தில் நெல்மணிகள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. பதர்களாக் எந்த பாதிப்பும் இல்லை. காக்கா குருவிகள் நெல் மணிகளை கொஞ்சம், கொஞ்சமாக கொத்திச் செல்வதால் நெல் பயிர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதுபோல் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல் புதிய கட்சிகளால் எங்கள் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஜெயலலிதா ஆட்சி கொண்டு வருவோம் என்று சொன்னவர்களின் சாயம் வெளுத்து உள்ளது. சசிகாலாவிற்கு 0.1 சதவீதம் வாக்குகள் கூட கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* அன்று மிரட்டல்… இன்று பதுங்கல் ஓபிஎஸ் விவகாரத்தில் திடீர் பல்டி
‘‘என்டிஏ கூட்டணிக்கு வந்தால் நல்லது. இல்லையென்றால் முகத்திரை கிழிக்கப்படும்’’ என்று ஓபிஎஸ்சுக்கு டிடிவி எச்சரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக நேற்று தேனியில் பேசிய ஓபிஎஸ், ‘‘டிடிவியை விட எனக்கு அதற்கு மேல பேச தெரியும். அரசியல் நாகரிகம் கருதி நான் பேசவில்லை’’ என்று தெரிவித்தார். இதுதொடர்பாக நேற்று மாலை நெல்லையில் டிடிவியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘‘ஓபிஎஸ் மீது எப்போதும் தனிப்பட்ட மரியாதை உண்டு. அவர் எந்த கட்சி கூட்டணியில் இணைவது என்பது அவரது தனிப்பட்ட விருப்பமும், உரிமையுமாகும். அவர் குறித்து நான் தரக்குறைவாக விமர்சித்தது இல்லை. அவர் எனது நல்ல நண்பர்’’ என்றார்.
* எடப்பாடியை ஏற்கவில்லையா?
டிடிவி.தினகரனிடம் நிருபர்கள், ‘‘எடப்பாடி பழனிசாமியை முழுமனதோடு முதல்வராக்க டிடிவி.தினகரன், அண்ணாமலை போன்றோருக்கு விருப்பமில்லை என தொண்டர்கள் பேசுகின்றனரே?’’ என கேட்டதற்கு, ‘‘அப்படியா? யாரோ சிலர் பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் கூட்டணியில் அமமுகவிற்கு தொகுதி உடன்பாடு முடிந்து விட்டதா என என்னிடம் கேட்கிறார்கள். இன்னும் இல்லை’’ என்றார்.
